Breaking News
ஐ.பி.எல். கிரிக்கெட்: 11 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அணிக்கு திரும்புகிறார், ஷிகர் தவான்

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 29-ந் தேதி முதல் மே 19-ந் தேதி வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேர்தல் தேதிக்கு தகுந்தபடி போட்டியின் தொடக்க கட்ட ஆட்டங்களை தென்ஆப்பிரிக்கா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை செய்து வருகிறது.

ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் டிசம்பர் 16-ந் தேதி நடைபெறுகிறது. ஏலத்துக்கு முன்னதாக வீரர்கள் விடுவிப்பு மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றை அணி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. வீரர்கள் பரிமாற்றம் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் முக்கிய வீரராக விளங்கிய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 11 ஆண்டுகளுக்கு பிறகு தனது தாயக அணியான டெல்லி டேர்டெவில்ஸ்க்கு திரும்புகிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த சீசனில் ஷிகர் தவானை ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தக்க வைக்கவில்லை. அவரை ஏலத்தின் மூலம் ரூ.5.2 கோடிக்கு எடுத்தது. ஆனால் தனக்கு நிர்ணயித்த விலையில் ஷிகர் தவான் அதிருப்தி அடைந்ததாக செய்திகள் வெளியாயின.

இதைத்தொடர்ந்து ஷிகர் தவானை விடுவிக்க ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ஷிகர் தவானை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விட்டுக்கொடுத்து விட்டு அவருக்கு பதிலாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள விஜய் சங்கர் (ரூ.3.2 கோடி), ஷபாஸ் நதீம் (ரூ.3.2 கோடி), அபிஷேக் சர்மா (ரூ.55 லட்சம்) ஆகியோரை தங்கள் பக்கம் இழுத்து கொள்ள ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.

2008-ம் ஆண்டு நடந்த தொடக்க ஐ.பி.எல். போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஷிகர் தவான் விளையாடினார். அதன் பிறகு அடுத்த 2 ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றார். இதனை அடுத்து ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு மாறினார். 2013-ம் ஆண்டு முதல் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சன் ரைசர்ஸ் அணிக்காக ஷிகர் தவான் அதிக ரன் குவித்த வீரர் ஆவார். அவர் அந்த அணிக்காக 91 ஆட்டங்களில் ஆடி 2,768 ரன்கள் குவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.