அமெரிக்காவில் யோகா அரங்கத்தில் துப்பாக்கிச்சூடு 3 பேர் சாவு
யோகா அரங்கில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 5.45 மணிக்கு மர்ம நபர் ஒருவர் நுழைந்து, அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதனால் பெரும் பதற்றம் உருவானது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார் வருவதற்குள் பலரை அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி அவர்கள் ரத்தம் சிந்தியபடி தரையில் விழுந்து கிடந்தனர். அதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அங்கு துப்பாக்கிக்குண்டு பாய்ந்து, தரையில் விழுந்து கிடந்தவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக டலஹாசி போலீஸ் தலைமை அதிகாரி மிக்கேல் டெலியோ கூறும்போது, ‘‘ இந்த சம்பவத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தியவரை எதிர்த்து அங்கு இருந்தவர்கள் தீரமுடன் சண்டை போட்டதாக தெரிகிறது. அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், மற்றவர்களை காப்பாற்றவும் முயற்சித்து உள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒரே ஒரு நபர்தான் ஈடுபட்டுள்ளார். மற்றபடி சமூகத்தில் மற்ற யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை’’ என்றார்.
அந்த நகர மேயர் ஆண்ட்ரூ ஜில்லியம், புளோரிடா மாகாண கவர்னர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அவர் டலஹாசிக்கு விரைந்தார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்து செயல்பட்ட போலீசாருக்கு அவர் பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து உடனடியாக தெரியவரவில்லை. போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.