Breaking News
தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் ஆட்சியை தக்கவைக்க அ.தி.மு.க. தீவிரம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி. மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகியோர் மரணம் காரணமாக திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலி இடமாக அறிவிக்கப்பட்டன.

இத்துடன் தகுதி நீக்கம் காரணமாக காலியாக உள்ள 18 தொகுதிகளுக் கும் சேர்த்து, 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.ஆளும் அ.தி.மு.க.வுக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவே உள்ளது. 20 தொகுதிகளில் 8 அல்லது 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அ.தி.மு.க. சட்டசபையில் மெஜாரிட்டியை பெற முடியும். எனவே இந்த 20 தொகுதி இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க் கப்படுகிறது.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய இலக்குடன் அ.தி.மு.க. தேர்தல் பணிகளை முன்னதாகவே தொடங்கி உள்ளது. 20 தொகுதிகளிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுடன் 20 தொகுதிகளிலும் நடைபெற உள்ள இடைத்தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து விவாதிப்பதற்காக அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நேற்று ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் 20 தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக தொகுதி பொறுப்பாளர்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டு அறிந்தனர். தேர்தல் பிரசார பயண வியூகத்தை எவ்வாறு அமைப்பது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. 20 தொகுதிகளிலும் பேச்சாளர்களை களம் இறக்கி, தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய பலரும், 20 தொகுதிகளிலும் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும், அவர்களது பிரசாரத்துக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது பற்றியும், டி.டி.வி.தினகரன் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு சவால் விடும் வகையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆலோசனைக்கு பிறகு பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர், ‘20 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஜெயலலிதா கொடுத்த ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள குறைந்தபட்சம் 8 தொகுதிகளிலாவது நாம் வெற்றி பெற வேண்டும். ஆர்.கே.நகரை போல் விட்டு விடக்கூடாது. அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் 20 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்’ என்று அவர் பேசியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பற்றி எல்லோரும் சுட்டிக்காட்டினார்கள். அந்த தேர்தலை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய முழு கவனமும் 20 தொகுதிகளில் இருக்க வேண்டும். இந்த 20 தொகுதிகளிலும் வென்று நாம் யார் என்பதை எதிரணிக்கு காட்ட வேண்டும். நம்முடன் இருந்த துரோகியை எதிர்த்து களம் காண இருக்கிறோம்.

ரூபாய் நோட்டுகளை வைத்து வித்தைகாட்டும் அந்த துரோகியை எதிர்த்தும், தி.மு.க.வை எதிர்த்தும் நாம் வெற்றி பெற்றாகி விட வேண்டும். அதற்காக இப்போதே உழைக்க தொடங்குங்கள். அ.தி.மு.க.வை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த வெற்றியை நம் உறுதியாக்கி கொள்ள வேண்டும். அதற்கு உங்களுக்கு என்னென்ன உதவி வேண்டுமோ அதை தலைமை கழகத்தில் கேளுங் கள். வெற்றி ஒன்றே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் 20 தொகுதிகளிலும் எல்லோருக்கும் தெரிந்த உள்ளூர் நபர்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.