தாமதம் ஆனாலும் “சரியான நேரத்துக்கு வந்து அடிக்க வேண்டும்” ‘2.0’ பட விழாவில் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற 29-ந்தேதி திரைக்கு வருகிறது. 2.0 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-எனக்கு தாய் தந்தையாக இருப்பவர் எனது அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட். என்னை வளர்த்து நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்து நான் செய்த தவறுகளை மன்னித்து இப்போது கூட எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார். அவர் இந்த விழாவுக்கு வந்து இருப்பது சந்தோஷம். நான் நடித்துள்ள 2.0 படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்.
இயக்குனர் ஷங்கருக்கும் தயாரிப்பாளர் சுபாஷ் கரனுக்கும் வாழ்த்துக்கள். இந்த படத்துக்கு சுபாஷ்கரன் ரூ.600 கோடி முதலீடு செய்து இருக்கிறார். ரஜினிகாந்துக்காகவோ அக்ஷய்குமாருக்காகவோ இதை செய்யவில்லை. ஷங்கர் எடுக்கும் படம் தோற்காது என்று அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையினாலேயே செய்து இருக்கிறார்.
25 வருடங்களாக சிறந்த டைரக்டராக தன்னை நிரூபித்து வருகிறார் ஷங்கர். அவர் ஒரு இந்திய ஜேம்ஸ் குவென், ஸ்டீவன் ஸ்பீல் பெர்க். இந்த படம் வெற்றிபெறும் என்று நான் நம்புவதற்கு காரணம் தயாரிப்பாளர் ரூ.600 கோடி போட்டு இருக்கிறார் என்பதற்காக மட்டும் அல்ல. எல்லா படங்களுக்கும் கடின உழைப்பை கொடுக்கிறார்கள். ஆனாலும் சில மேஜிக் நிகழ வேண்டும். இந்த படத்தில் அந்த மேஜிக் நடக்கும்.
2.0 படத்தில் திகில், பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும். அதோடு நல்ல ஒரு செய்தியும் உள்ளது. அது உலக அளவுக்கான செய்தியாக இருக்கும். நவீன தொழில் நுட்பங்கள் உலகுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் படத்தில் சொல்லப்பட்டு உள்ளது. இந்த படம் திரைக்கு வந்த பிறகு எல்லோரும் இதை விளம்பரப்படுத்துவார்கள். இது குழந்தைகளுக்கானது மட்டுமன்றி அனைத்து தரப்பினருக்கான படமாகவும் இருக்கும்.
ஷங்கர் 2.0 படத்தின் கதையை என்னிடம் சொன்னதும் ஏற்கனவே அவர் படங்களில் நடித்து இருப்பதால் இந்த படத்தை அவரால் எடுக்க முடியுமா என்று கேட்கவில்லை. அவரால் செய்ய முடியும் என்று நம்பினேன். நான் அவரிடம் கேட்ட ஒரே கேள்வி யார் தயாரிக்கிறார் என்பதுதான். அதற்கு சுபாஷ்கரன் என்று சொன்னார். சிவாஜி படத்தை ஷங்கர் எடுத்தபோது முடிவு செய்த பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு செலவு ஆனது. படத்தை முடிக்கும்போது அதையும் தாண்டியது.
ஆனால் படம் திரைக்கு வந்த பிறகு வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் எல்லோரும் சந்தோஷப்படும்படி நல்ல வசூல் செய்தது. அதன்பிறகு எந்திரன் படத்துக்கும் பட்ஜெட்டை விட 20, 30 சதவீதம் அதிகம் செலவு ஆனது. எல்லோரும் எப்படி பணத்தை எடுக்கப்போகிறார்கள் என்று ஆச்சரியப்பட்டனர். அதுவும் நன்றாக ஓடியது.
பின்னர் எந்திரன் எவ்வளவு வசூல் செய்ததோ அந்த பணத்தை போடுகிறேன். எனக்கு லாபம் வேண்டாம் 2.0 படத்தை எடுக்கலாம் என்று சுபாஷ்கரன் வந்தார். படத்தை ஆரம்பிக்கும்போது 300, 350 கோடி பட்ஜெட். இப்போது அதிகமாகி விட்டது. நிச்சயம் செலவை விட இரண்டு மடங்கு வசூல் செய்யும்.
இந்த படத்தை ஆரம்பிக்கும்போது எனக்கு உடல்நிலை சரியில்லை. 7 நாட்கள் படப்பிடிப்பை முடித்த பிறகு ஷங்கரிடம்,“என்னால் முடியவில்லை. விட்டு விடுங்கள். நான் வாங்கிய அட்வான்சை திருப்பி கொடுத்து விடுகிறேன். இதுவரை நடந்த படப்பிடிப்புக்கான பணத்தையும் கொடுத்து விடுகிறேன்” என்றேன்.
ஷங்கர் என் கையை பிடித்து, “எவ்வளவு முடியுமோ அதை செய்யுங்கள். நீங்கள் இல்லாமல் இந்த படத்தை எடுக்க முடியாது” என்றார். எடை கூடிய ஆடையை அணிய வேண்டாம் என்றும் கூறினார். நான் ஒரு கதாபாத்திரத்துக்கு அந்த ஆடை வேண்டும் என்று வற்புறுத்தி அணிந்தேன். மலேசியா போய் கபாலி படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பும்போது எனது உடல் நிலை மீண்டும் மோசமானது.
கடைசி கட்ட படப் பிடிப்பை டெல்லியில் 40 நாட்கள் முடித்து விட்டு வந்ததும் டாக்டர்கள் 4 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றனர். சுபாஷ்கரன் வந்து 4 மாதம் இல்லை. 4 வருடம் எடுத்துக் கொள்ளுங்கள். பணம் முக்கியம் இல்லை. உங்கள் ஆரோக்கியம்தான் முக்கியம் என்றார். நல்ல நண்பர்கள் கிடைப்பது கோகினூர் வைரம் மாதிரி அப்படி ஒரு நண்பராக அவர் கிடைத்தார்.
எனது நண்பர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படம் மிகப்பெரிய வெற்றிபடமாக வரும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இந்த படம் அதிகம் தாமதமாகி விட்டது எப்போது வரும்.? வருமா? இல்லையா? என்று எல்லோரும் கேட்டனர். கொஞ்சம் தாமதமானாலும் கூட சரியான நேரத்துக்கு வரவேண்டும். வந்தால் கண்டிப்பாக அடிக்க வேண்டும். நான் படத்தை பற்றிச் சொன்னேன். எனவே மக்கள் நம்பியாச்சு. ‘ஹிட்’ என்று முடிவு பண்ணியாச்சு. ரிலீஸ் செய்வதுதான் பாக்கி. ஏற்கனவே தமிழ் படங்களை உலகை இந்திய அளவுக்கு கொண்டு போன ஷங்கர் இந்த படம் மூலம் சர்வதேச அளவுக்கு கொண்டு போவார்.” இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, “எனக்கு பிடித்த கதாநாயகன் ரஜினிகாந்த். அவர் எந்த இடத்தில் இருந்து வந்து உழைப்பால் இந்த அளவுக்கு உயர்ந்தார் என்பதை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். நான் 40 வயதில் ஓய்வு பெற நினைத்தேன். ரஜினியின் உழைப்பை பார்த்த பிறகு மனதை மாற்றிக்கொண்டேன்” என்றார்.
இயக்குனர் ஷங்கர் பேசும்போது, “2.0 படத்தின் பலமே ரஜினிதான். படப்பிடிப்பில் முழங்காலில் அவருக்கு அடிபட்டதும் ஆஸ்பத்திரிக்கு அழைத்தபோது நடித்து முடித்து விட்டு வருகிறேன் என்றார். நாங்கள் வற்புறுத்தி அனுப்பி வைத்தோம். 2.0 படத்தை 3 டியிலும் 4டி ஒலி தொழில் நுட்பத்திலும் உருவாக்கி உள்ளோம்” என்றார்.
நடிகர்கள் கமல்ஹாசன், விஷால் ஆகியோர் வீடியோ மூலம் படத்துக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்கள்.