Breaking News
கூட்டுறவு கடன் சங்கம், வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு கடன் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தக்காலம் முடிவுற்றதால், ஊதிய விகிதத்தை திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று, புதிய ஊதிய விகிதங்களை பரிந்துரை செய்ய ஏதுவாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்க ஆணையிடப்பட்டது. இந்தக் குழுக்கள் தற்போது தங்களது பரிந்துரைகளை அளித்து உள்ளன.மேலும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேலாண்மை இயக்குனர்களும், இவ்வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தினை நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்துள்ளனர். இப்பரிந்துரைகளின் அடிப்படையில் பின்வரும் கூட்டுறவு கடன் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஆணையிடப்படுகிறது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நிலுவைத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் 13 ஆயிரத்து 140 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.988-ம், அதிகபட்சம் ரூ.4,613-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதமாகும்.

மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதனால் 4,767 பேர் பயன் பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1,114-ம், அதிகபட்சம் ரூ.16,963-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதம்.

நகர கூட்டுறவு வங்கிகளுக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதன் மூலம் 1,286 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.455-ம், அதிகபட்சம் ரூ.16,485-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதம்.

பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதனால் 1,378 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.3,200-ம், அதிகபட்சம் ரூ.12,500-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 2.57 மடங்காகும்.

நகர கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப் படும். இதனால் 462 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2,500-ம், அதிகபட்சம் ரூ.18 ஆயிரமும் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 2.70 மடங்காகும்.

தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். மொத்தம் 485 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1,189-ம், அதிகபட்சம் ரூ.7,815-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதமாகும்.

தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத்தொகை வழங்கப்படும். இதன் காரணமாக 117 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2,521-ம், அதிகபட்சம் ரூ.15,526-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 15 சதவீதம்.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதன்மூலம் 413 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.3,456-ம், அதிகபட்சம் ரூ.28,017-ம் கிடைக்கும். அதிகப்பட்ச ஊதிய உயர்வு 21 சதவீதம்.

இந்த ஊதிய உயர்வால் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 22,048 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.143.72 கோடி ஆகும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.