Breaking News
பெண்கள் நுழைந்தால் கோவில் நடையை மூடுவோம் – மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் கேரளாவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்தபோது 2 இளம்பெண் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் நோக்கி செல்ல முயன்றனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலும் சபரிமலையில் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி ஐயப்ப பக்தர்களை விரட்டி அடித்தனர். இதனால் சபரிமலையில் பதட்டமான சூழ்நிலை உருவானது.

அதே சமயம் சபரிமலை சன்னிதானத்தில் தந்திரிகள், கோவில் ஊழியர்களும் 18ம் படி அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் பக்தர்களை சன்னிதானத்துக்குள் நுழைய விட மாட்டோம் என்று அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைந்தால் கோவிலை பூட்டி சாவியை ராஜகுடும்பத்திடம் ஒப்படைப்போம். கோவில் நடையை சாத்தி சுத்தி கலச பூஜை நடத்தப்படும் என்று தந்திரி கண்டரரு ராஜீவரு அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. நடைதிறப்பின்போது இளம்பெண் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என்று ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரியும் பெண் பக்தர்களை சன்னிதானத்தில் அனுமதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் போலீஸ் ஐ.ஜி. அஜித்குமாரை சந்தித்து தனது கருத்தை தெரிவித்தார். “சபரிமலை கோவிலில் ஐதீகத்தை மீறி பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தால் கோவில் நடையை அடைத்து சுத்திகலச பூஜை நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.

இதனால் சபரிமலை கோவில் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.