Breaking News
வெஸ்ட் இண்டீஸ் 109 ரன்னில் சுருண்டது: முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்றிரவு நடந்தது. இந்திய அணியில் கலீல் அகமது, ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். இதில் கலீல் அகமது ஏற்கனவே ஒரு நாள் போட்டியில் ஆடியிருக்கிறார். குருணல் பாண்ட்யாவுக்கு இதுவே முதல் சர்வதேச போட்டியாகும். போதிய பார்மில் இல்லாததால் டோனி ஓரங்கட்டப்பட்ட நிலையில் அவர் இல்லாமல் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடும் முதல் சர்வதேச 20 ஓவர் போட்டி இது தான். விக்கெட் கீப்பிங் பணியை தினேஷ் கார்த்திக் கவனித்தார்.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, பனிப்பொழிவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரில் 2 பவுண்டரி விரட்டியது. அது மட்டுமே அவர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கும்.

அதன் பிறகு இந்திய பவுலர்களின் தாக்குதலில் வெஸ்ட் இண்டீஸ் நிலைகுலைந்தது. தொடக்க ஆட்டக்காரர் தினேஷ் ராம்டின் (2 ரன்) உமேஷ் யாதவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். அடுத்து ஹெட்மயர் இறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் ஷாய் ஹோப் (14 ரன்) ரன்-அவுட்டில் வீழ்ந்தார். ஹோப் ரன் எடுக்க ஓட, எதிர்முனையில் நின்ற ஹெட்மயர் சில அடி தூரம் வந்து விட்டு திரும்பி ஓடினார். ஒரு கட்டத்தில் இருவரும் ஒரேமுனையில் நின்றிருக்க, ஹோப் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். ஹெட்மயரும் (10 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

இதையடுத்து ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட்டை தான் அந்த அணி நம்பி இருந்தது. குருணல் பாண்ட்யாவின் பந்து வீச்சில் ஒரு சிக்சர் தூக்கிய பொல்லார்ட் (14 ரன்) அவரது இன்னொரு ஓவரில் கேட்ச் ஆனார். குல்தீப் யாதவும் சுழலில் மிரட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தகிடுதத்தம் போட்டனர்.

பின்வரிசையில் பாபியான் ஆலென் (27 ரன், 20 பந்து 4 பவுண்டரி), கீமோ பால் (15 ரன்) தங்களது அணி 100 ரன்களை கடக்க உதவினர். 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய வெஸ்ட இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2014-ம்ஆண்டு டாக்காவில் நடந்த ஆட்டத்தில் 129 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்சமாக இருந்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியும் ஆரம்பத்தில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மா (6 ரன்), ஷிகர் தவான் (3 ரன்), ரிஷாப் பான்ட் (1 ரன்), லோகேஷ் ராகுல் (16 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் கபளகரம் செய்தனர். அப்போது இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 45 ரன்களுடன் பரிதவித்தது. இதன் பின்னர் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், பொறுமையாக ஆடி அணியை ஆபத்தில் இருந்து காப்பாற்றினார். அவருக்கு மனிஷ் பாண்டே (19 ரன்) ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். பொல்லார்ட்டின் ஒரே ஓவரில் தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரி விளாசி நெருக்கடியை வெகுவாக தணித்தார்.

தினேஷ் கார்த்திக்கும், புதுமுக வீரர் குருணல் பாண்ட்யாவும் இணைந்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் 31 ரன்களுடனும் (34 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), குருணல் பாண்ட்யா 21 ரன்களுடனும் (9 பந்து, 3 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) லக்னோவில் நடக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.