Breaking News
உத்தரகோசமங்கை கோவிலில் சிலை திருட முயன்ற நபர்கள் விரைவில் பிடிபடுவர் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தகவல்

ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை கோவிலில் சிலையை திருட முயன்ற சம்பவம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தார்.

ராமநாதபுரம் அருகே உள்ள தொன்மை சிறப்பு வாய்ந்த உத்தரகோசமங்கை கோவிலில் கடந்த 4-ந் தேதி நள்ளிரவில் அபூர்வ மரகத நடராஜர் சன்னதியில் மர்ம நபர்கள் புகுந்து சிலையை திருட முயன்றனர். அப்போது தடுக்க வந்த காவலாளி செல்லமுத்துவை தாக்கிய அவர்கள், எச்சரிக்கை மணி ஒலித்ததால் தப்பி ஓடிவிட்டனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் உத்தரகோசமங்கை கோவிலுக்கு நேரில் வந்தார். அவருடன் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் ஆகியோர் உடன் வந்தனர்.

கோவிலுக்குள் சென்ற ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஒவ்வொரு பகுதியாக சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார். மர்ம நபர்கள் வந்த பகுதி, திரும்பிச் சென்ற பகுதி, காவலாளியை தாக்கிய இடம், உள்ளே நுழைய வாய்ப்புள்ள பகுதிகள் என ஒவ்வொரு இடமாக சென்று பார்வையிட்டு விரிவான விசாரணை நடத்தினார். பின்னர் சாமி சன்னதி, அம்பாள் சன்னதி, மரகத நடராஜர் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் பலம் வாய்ந்த இரும்பு கதவு அமைக்கவும், அதிக சக்தி வாய்ந்த கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக அமைக்கவும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

சம்பவம் நடந்தது குறித்து நேரில் ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தேன். குற்றவாளிகள் ஒருவாரம் அல்லது 10 நாட்களுக்குள் பிடிபடுவார்கள். கோவிலில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சிலை கடத்தலில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். கோர்ட்டில் அவர்களுக்கான தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.