ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், கே.பாண்டியராஜன், என்.நடராஜ் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இதைப்போல ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணியும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும், இந்த வழக்குகளின் விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி வருகிற 27-ந் தேதி இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்று அவர்கள் அறிவித்தனர்.