Breaking News
‘ரபேல்’ விவகாரத்தில் மற்றொரு அவமானம் அம்பலம் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதுதொடர்பாக சர்ச்சை எழுந்ததால், இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இந்த மனு மீதான விசாரணையின்போது, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ஆதரித்து ‘இறையாண்மை உத்தரவாதம்’ எதையும் பிரான்ஸ் அரசு அளிக்கவில்லை என்றும், உண்மையாக இருப்பதாக உறுதி அளிக்கும் ஒரு கடிதம் மட்டும் அளித்து இருப்பதாகவும், அரசாங்க உத்தரவாதத்துக்கு அதுவே போதும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் விளக்கத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கடுமையாக விமர்சித்தார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

‘ரபேல்’ விவகாரத்தில் மறைத்து வைக்கப்பட்ட இன்னொரு அவமானம் அம்பலமாகி விட்டது. ரபேல் ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அரசு உத்தரவாதம் அளிக்கவில்லையாம்.

ஆனால், உண்மையாக இருப்பதாக உறுதி அளிக்கும் கடிதத்தை பிரான்ஸ் அரசு அளித்து இருப்பதாக பிரதமர் கூறுகிறார். ‘அரசுக்கும், அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம்’ என்று கூறுவதற்கு இதுவே போதுமா?

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-

ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க உகந்த ஒரே இடம், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆகும். எனவே, அதற்கு உத்தரவிட வேண்டும். தனது பெரும் பணக்கார நண்பர்களுக்கு உதவுவதற்காக, தேசநலனில் சமரசம் செய்யும் அளவுக்கு பிரதமர் சென்றுள்ளார். பிரான்ஸ் அரசின் இறையாண்மை உத்தரவாதத்தை பெறாமல் விட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.