பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
10 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) இந்திய அணி, அயர்லாந்துடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த அயர்லாந்து கேப்டன் லாரா டெலனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு மிதாலி ராஜூவும், மந்தனாவும் அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். ஸ்கோர் 67 ரன்களாக உயர்ந்த போது, மந்தனா 33 ரன்களில் (29 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கிளன் போல்டு ஆனார். அதைத் தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் (18 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (7 ரன்), வேதா கிருஷ்ணமூர்த்தி (9 ரன்) ஏமாற்றம் அளித்தனர். இதற்கிடையே 2 முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்து தனது 17-வது அரைசதத்தை பூர்த்தி செய்த மிதாலிராஜ் 51 ரன்களில் (56 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். தமிழகத்தை சேர்ந்த ஹேமலதா 4 ரன்னில் ரன்-அவுட் ஆனார். இந்திய அணி 160 ரன்கள் வரை எடுக்க வாய்ப்பு இருப்பது போலவே தோன்றியது. ஆனால் கடைசி 3 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால் 150 ரன்களை கூட தாண்ட முடியாமல் போய் விட்டது.
இந்தியா வெற்றி
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய குட்டி அணியான அயர்லாந்து, இந்திய சுழல் ஜாலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடியது. இந்திய தரப்பில் 6 வீராங்கனைகள் சுழற்பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர். 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய அயர்லாந்து அணி 8 விக்கெட்டுக்கு 93 ரன்களே எடுத்தது. அந்த அணியில் ஷில்லிங்டன் (23 ரன்), இசோபல் ஜாய்ஸ் (33 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு அரைஇறுதிக்கும் முன்னேறியது. ராதா யாதவ் 3 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்தியாவுக்கு இது 3-வது வெற்றியாகும். ஏற்கனவே நியூசிலாந்து, பாகிஸ்தானையும் இந்தியா சாய்த்து இருந்தது. 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைப்பது இது 3-வது முறையாகும். 2009, 2010-ம் ஆண்டுகளிலும் அரைஇறுதி வரை முன்னேறி இருந்தது.
தென்ஆப்பிரிக்கா தோல்வி
முன்னதாக ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. இந்த எளிய இலக்கை கூட எட்ட முடியாமல் தென்ஆப்பிரிக்க அணி 18.4 ஓவர்களில் 76 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி 28 ரன்களுக்கு தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை தாரைவார்த்தது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்ததுடன், ஆட்டநாயகி விருதையும் பெற்றார். வெஸ்ட்இண்டீஸ் அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். தென்ஆப்பிரிக்காவுக்கு இது முதலாவது தோல்வியாகும்.