திருவொற்றியூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவொற்றியூர் மேற்கு பகுதியான சக்தி கணபதி நகர், கலைஞர் நகர், ஜோதி நகர், சிவசக்தி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.
பல வீடுகளை சுற்றிலும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வெளியில் செல்லமுடியாமல் வீட்டுக்குள்ளேயே பொதுமக்கள் முடங்கி இருப்பதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தாழ்வான பகுதிகளில் உள்ள சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். சிலர் தங்க இடம் இன்றி, தங்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
வீடுகள் மட்டும் அல்லாது சாலைகளிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் மோட்டார் சைக்கிளை வீட்டில் இருந்து எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
வருடா வருடம் பருவமழை பெய்யும்போது, இதுபோல் சாலைகளில் வெள்ளநீர் தேங்குவது வாடிக்கையாக இருப்பதாகவும், ஆனால் இதுவரை இந்த பிரச்சினைக்கு யாரும் தீர்வு காணவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கலைஞர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததாலும், கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததாலும் ஒரு நாள் மழைக்குகூட தாக்குப்பிடிக்க முடியாமல் மழைநீர் வெளியே செல்ல வழியின்றி குடியிருப்புக்குள் சூழ்வதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அதேபோன்று திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட நகர்களில் இருந்து வெளியேறும் மழைநீர், கார்க்கில் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் 1,100 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ள இடத்தை சூழ்ந்து உள்ளது. அங்கிருந்து மழைநீரை மின்மோட்டார் கொண்டு வெளியேற்றி வருகின்றனர்.
திருவொற்றியூர் ராஜாஜி நகர், ஆர்.கே.நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமையில் அ.தி.மு.க. வினர் உணவு வழங்கினர். அவர்களுடன் மண்டல உதவி ஆணையர் மோகன் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கினார்கள்.
எண்ணூர் தாழங்குப்பம், காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடலுக்குள், பைபர் படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்து உள்ளனர். மணலி விரைவு சாலையில் முட்டளவு மழைநீர் வெள்ளம் ஓடுவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் டோல்கேட் முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுவதால் சாலையின் இருபுறமும் பள்ளங்கள் ஏற்பட்டு பல இடங்களில், குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மாறிவிட்டது. இதனால் திருவொற்றியூரில் இருந்து தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வந்த பஸ் போக்குவரத்து பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டது.
இதனால் பொதுமக்கள் அதிக கட்டணம் கொடுத்து ஷேர்ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களில் சென்றுவர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.