Breaking News
சென்னை அருகே ரூ.2 ஆயிரம் கோடியில் உணவுப்பூங்கா : எடப்பாடி பழனிசாமி தகவல்

கோவையை அடுத்த வையம்பாளையத்தில் மறைந்த விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு ரூ.1½ கோடி செலவில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு வந்தவர்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்றார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார்.

விழாவில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு நாராயணசாமி நாயுடு மணி மண்டபம் மற்றும் அவரது உருவச்சிலையை திறந்துவைத்தார். அவரது சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசும் போது அவர் கூறியதாவது:-

நாராயணசாமி நாயுடுவின் நினைவை போற்றும் வகையில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா கோவையை அடுத்த வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்க உத்தரவிட்டார். ரூ.1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 சென்ட் நிலத்தில் வையம்பாளையத்தில் அமைந்துள்ள நாராயணசாமி நாயுடு நினைவிடத்தில் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்ட மணி மண்டபத்தை ஒரு விவசாயி ஆகிய நான் திறந்து வைத்ததில் பெருமிதம் கொள்கிறேன்.

ஆயிரத்து 652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுக்க, முழுக்க மாநில நிதியின் மூலம் அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. பிப்ரவரி மாத இறுதிக்குள் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தான் குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை கொண்டுவந்துள்ளோம். விவசாயிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் ஆங்காங்கே இருக்கிற ஏரிகள், குளங்கள் எல்லாம் ஆழப்படுத்தப்பட்டு பெய்கின்ற மழைநீர் சேமித்து வைக்கப்படுகிறது. ரூ.328 கோடி ஒதுக்கி, நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்டுகிற பணி தொடங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்றைக்கு படிப்படியாக தமிழகம் முழுவதும் இருக்கின்ற ஓடைகள், நதிகள் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, நீரை சேமித்து, நிலத்தடி நீர் உயர்கிற சூழ்நிலையை அரசு ஏற்படுத்தும்.

கோதாவரி-காவிரி இணைப்பு நிச்சயம் இந்த அரசு நிறைவேற்றி தரும். ஆகவே, கோதாவரியில் உற்பத்தியாகிற நீர் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 டி.எம்.சி. தண்ணீர் கடலிலே கலந்து வீணாகிறது. அந்த வீணாகிற நீரை, தெலுங்கானா, ஆந்திரா மூலமாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து சுமார் 200 டி.எம்.சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. அது விரைந்து செயல்படுத்தப்படும் என்பதை இந்த நேரத்தில் ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

பருவமழை பொய்க்கின்றபோது, டெல்டா பாசன விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். 20 மாவட்டங்களுக்கு காவிரி நீர் தான் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. பல்வேறு காலகட்டங்களில் விவசாயிகள் நடவு செய்கிறபோது, தண்ணீர் இல்லாமல் காய்ந்து விடுகிறது. நஷ்டம் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தின் மூலமாக நிரந்தர தீர்வு காணப்படும்.

நவீன திட்டங்களின் மூலமாக விவசாயிகள் உற்பத்தி செய்கிற காய்கறிகளை விற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு, சந்தை ஏற்படுத்துவதற்காக ஆங்காங்கே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் இருக்கிற விவசாயிகள் உற்பத்தி செய்கிற காய்கறிகளை அங்கே விற்பனை செய்யலாம், ஆன்-லைனிலும் விற்பனை செய்யலாம். விளைபொருட்களுக்கு குறைந்த விலை வருகிறபோது பாதுகாத்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளும் கட்டித்தரப்பட்டுள்ளது.

விவசாய சந்தைகளின் மூலமாக சேகரிக்கப்பட்ட காய்கறிகளையெல்லாம் ஒரே இடத்தில் விற்பனை செய்வதற்கு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மற்றும் விவசாயிகள் நல்ல விலைக்கு விற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க, சென்னைக்கு அருகில் ரூ.2 ஆயிரம் கோடியில் உணவுப்பூங்கா ஒன்று, தனியார் பங்களிப்போடு அமைப்பதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. இந்த திட்டத்திற்கு தேவையான கிட்டத்தட்ட 300 ஏக்கருக்கும் மேலான நிலம் கையகப்படுத்துவதற்கான பணி ஆய்வில் இருந்து கொண்டிருக்கிறது.

விவசாயிகளின் உபதொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்பு. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் தமிழ்நாட்டில் அமையவிருக்கிறது. பல்வேறு வகையான பசுக்கள், ஆடுகள், கோழிகள், மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகள் அறிந்துகொள்வதற்கும், விவசாயிகளுக்கு கூடுதலான விலை கிடைப்பதற்கும் இந்த ஆராய்ச்சி மையம் பயன்படும். இரவு, பகல் பாராமல், வெயில், மழை என்றும் பாராமல் உழைக்கின்ற விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறவேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என இரண்டு பேரையும் காக்கின்ற அரசாக இந்த அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், அமைச்சர் கடம்பூர் ராஜு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், கோவை அரசு சட்டக்கல்லூரிக்கு ரூ.10.16 கோடி செலவில் புதிய கலையரங்கம், நூலக கட்டிடம் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.