தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் மறுப்பு
தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன், குக்கர் சின்னத்தில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார்.இதைத் தொடர்ந்து, இனி வரும் தேர்தல்களில், அ.ம.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, குக்கர் சின்னத்தை வழங்க, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும்படி, சுப்ரீம் கோர்ட்டில், தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல
இதற்கு, தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது:அ.ம.மு.க., தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல. அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு, குக்கர் போன்ற பொதுச் சின்னத்தை ஒதுக்க முடியாது.பொதுப் பட்டியலில் உள்ள சின்னத்தை, ஒரு தனிப்பட்ட கட்சி, உரிமை கோர முடியாது. அதே போல், பொதுப் பட்டியலில் உள்ள சின்னத்தை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வழங்குவது நடைமுறை அல்ல.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது.
4 வாரம் கெடு
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அக்கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த வழக்கை 4 வாரத்திற்குள் டில்லி ஐகோர்ட் முடிக்க வேண்டும். 4 வாரத்திற்குள் ஐகோர்ட் முடிவெடுக்காவிட்டால், தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம். இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.