பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6 ஆயிரம் உதவித்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? – மத்திய அரசு விளக்கம்
மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், சிறிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகளுக்கு வருமான உத்தரவாதம் வழங்குகிற வகையில் பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி என்ற திட்டத்தை செயல்படுத்தி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த தொகை 3 தவணைகளில், விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும். 2 ஹெக்டேர் (சுமார் 5 ஏக்கர்) வரையில் சாகுபடி நிலம் வைத்திருக்கிற விவசாயிகள் அனைவரும் இந்த நிதி உதவியைப் பெற முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிதி உதவி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும். மார்ச் 31-ந்தேதிக்குள் முதல் தவணையை வங்கிக்கணக்குகளில் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
யாருக்கு கிடைக்கும்?
இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது தொடர்பான செயல்பாட்டு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில், “சாகுபடி செய்யத்தக்க 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கிறவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். கணவன், மனைவி, குழந்தைகள் என ஒரு குடும்பத்துக்கு கூட்டாக இந்த வரையறைக்குள் சொத்து இருக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
யாருக்கு கிடைக்காது?
இந்த உதவித்தொகை விவசாயிகளில் யாருக்கெல்லாம் கிடைக்காது என்பதுவும் வழிமுறையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அது வருமாறு:-
* அரசியல் அமைப்பு பதவி வகித்தவர்கள், வகிக்கிறவர்களுக்கு கிடையாது.
* மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், முன்னாள் எம்.எல்.சி.க்கள், மாநகராட்சி மேயர்கள், முன்னாள் மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் ஆகியோரை உறுப்பினராக கொண்ட விவசாய குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி கிடையாது.
* மத்திய, மாநில அரசு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள், ஊழியர்கள், முன்னாள் அதிகாரிகள், ஊழியர்கள் குடும்பங்களுக்கும் விவசாய குடும்பங்களுக்கான நிதி உதவி கிடையாது.
* மாதம் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுகிற ஓய்வூதியதாரர்களின் குடும்பத்துக்கும் கிடையாது.
* கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்களின் குடும்பங்களுக்கும் கிடையாது.
* பதிவு செய்துள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள், கட்டுமான வல்லுனர்கள் குடும்பங்களுக்கும் விவசாயிகளுக்கான நிதி உதவி கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாவது தவணையின்போது நிதி உதவி பெறுகிற விவசாயிகள் ஆதார் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.