குப்பை கிடங்கில் 2-வது நாளாக தேடியும் சிக்கவில்லை சந்தியாவின் தலை கிடைக்காமல் தவிக்கும் போலீசார்
சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 51). சினிமா இயக்குனர். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி டூவிபுரம். இவருடைய மனைவி சந்தியா (35). துணை நடிகை.
மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 20-ந் தேதி வழக்கம்போல் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், சுத்தியலால் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்தார்.
பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, 4 பார்சல்களாக கட்டி குப்பை தொட்டியில் வீசினார். அவற்றில் ஒரு கை மற்றும் 2 கால்கள் அடங்கிய பார்சல் பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 21-ந் தேதி கண்டெடுக்கப்பட்டது. அதை கைப்பற்றி நடத்திய விசாரணையில்தான், கொலையானது துணை நடிகை, அவரை கொன்றது அவரது கணவரான இயக்குனர் என்பது தெரிந்தது.
போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்த இந்த வழக்கில் துப்பு துலக்க சந்தியாவின் ஆண் நண்பர் ஒருவர்தான் பெரிதும் உதவி உள்ளார். இதையடுத்து பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
முன்னதாக அவர் கொடுத்த தகவலின்பேரில் ஜாபர்கான்பேட்டை பாலத்துக்கு அடியில் வீசப்பட்டு இருந்த சந்தியாவின் இடுப்பில் இருந்து தொடை வரையிலான பகுதியை போலீசார் கைப்பற்றினர். இன்னும் சந்தியாவின் தலை, இடது கை மற்றும் உடல் பகுதிகள் கிடைக்கவில்லை.
அவை குப்பையோடு குப்பையாக பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு இருக்கலாம் என கருதிய போலீசார் நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் தீவிரமாக தேடினர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.
நேற்று 2-வது நாளாக பெருங்குடி குப்பை கிடங்கில் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் துணை நடிகையின் தலை, கை, உடல் பாகங்கள் உள்ளதா? என தீவிரமாக தேடினர். ஆனால் நேற்றும் கிடைக்காததால் போலீசார் தவிப்புக்கு ஆளானார்கள்.
இதனால் 3-வது நாளாக இன்றும்(சனிக்கிழமை) தேடும் பணி நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் அடுத்த வாரம் டி.என்.ஏ. சோதனை செய்வதற்காக தூத்துக்குடியில் உள்ள சந்தியாவின் 2 குழந்தைகளையும் வர வழைக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். தலை, உடல் பாகங்கள் கிடைக்கவில்லை என்றாலும் டி.ஏன்.ஏ. சோதனை மூலம் சந்தியாவின் உடல் பாகங்கள் என நிரூபணம் ஆகும் என போலீசார் தெரிவித்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சந்தியா கொலை வழக்கில், அவரது தலை மற்றும் மீதம் உள்ள உடல் பாகங்கள் கிடைக்காமல் கொலை செய்யப்பட்டது சந்தியாதான் என்பதை போலீசாரால் நிரூபிக்க முடியுமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
இதுபற்றி ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டும், கைரேகை நிபுணருமான கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
சந்தியா கொலை வழக்கில் அவரது தலை, உடல் கிடைத்தால்தான் சந்தியா கொலை செய்யப்பட்டதை கோர்ட்டில் நிரூபிக்க முடியும் என்பது இல்லை. அவருடைய கை கிடைத்து உள்ளதால் அதில் உள்ள ரேகையை வைத்தே உறுதிப்படுத்திவிடலாம்.
சந்தியாவின் மீட்கப்பட்ட கையில் உள்ள கைரேகையை எடுத்து ஆதார் அட்டை, பாஸ்போர்ட்டு, சொத்து பத்திரங்களில் உள்ள அவரது கைரேகையுடன் ஒப்பிட்டு அது சந்தியாதான் என நிரூபிக்கலாம். இது போன்று பல வழக்குகளில் கைரேகை மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.