Breaking News
சென்னை, மதுரை, கோவையில் 2 ஆயிரம் மின்சார பஸ்கள், விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

செய்திகள்
மாவட்ட செய்திகள்
விளையாட்டு
புதுச்சேரி
மும்பை
பெங்களூரு
சினிமா
ஜோதிடம்
ஆன்மிகம்
தலையங்கம்
உங்கள் முகவரி
மணப்பந்தல்
DT Apps
E-Paper
DTNext
Thanthi Ascend
Thanthi TV

மாநில செய்திகள்
சென்னை, மதுரை, கோவையில் 2 ஆயிரம் மின்சார பஸ்கள், விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை, மதுரை, கோவையில் 2 ஆயிரம் மின்சார பஸ்கள், விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

மாற்றுத்திறனாளி களுக்கு 3 ஆயிரம் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும், விவசாயி களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்று உள்ளன.
பதிவு: பிப்ரவரி 09, 2019 05:45 AM

சென்னை,

2019-2020-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் (வரவு-செலவு திட்டம்) நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி இலாகா பொறுப்பை வகிக்கும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதற்காக நேற்று காலை 9.57 மணிக்கு பட்ஜெட் புத்தகம் அடங்கிய சூட்கேசுடன் அவர் அவைக்கு வந்தார். அந்த சூட்கேசில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் ஒட்டப்பட்டு இருந்தது.

ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வந்தார். காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது.

ஓ.பன்னீர்செல்வம் காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். இடைவிடாமல் வாசித்த அவர் மதியம் 12.39 மணிக்கு தனது உரையை நிறைவு செய்தார். அதாவது, தொடர்ந்து 2 மணி 38 நிமிடங்கள் பட்ஜெட் உரையை அவர் வாசித்தார்.

முன்பெல்லாம் பட்ஜெட் உரையில் புதிய வரி விதிப்பு, வரிச் சலுகை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்று இருக்கும். ஆனால், நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பான ஜி.எஸ்.டி. அறிமுகமான பிறகு, மத்திய அரசு மட்டுமே வரி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட முடியும். என்றாலும், பெட்ரோல், மதுபானம் போன்றவற்றுக்கான வரி வசூல் மட்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், பட்ஜெட் உரையில் பெட்ரோல், மதுபானம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

என்றாலும் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகைகள், ஏழைகளுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள், சென்னை, மதுரை, கோவையில் மின்சார பஸ்கள், அப்துல் கலாம் பெயரில் புதிய கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்று உள்ளன. பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன்

* 2018-2019-ம் ஆண்டில் 1.80 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிதி ஆண்டில் ரூ.1,361 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேலும் 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைப்பதற்காக விவசாயிகளுக்கு அரசு 90 சதவீதம் மானியம் அளிக்கிறது. இந்த நிதி ஆண்டில் ரூ.84.09 கோடி மானிய உதவியுடன், 10 குதிரை திறன் வரையுள்ள சூரிய சக்தியால் இயங்கும் 2 ஆயிரம் பம்புசெட்டுகளை விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

* இந்த நிதி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, பயிர்க்கடன்கள் மீதான வட்டி தள்ளுபடிக்காக ரூ.200 கோடி வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 லட்சம் வீடுகள்

* முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி, ‘கஜா’ புயல் பாதித்த மாவட்டங்களில் சேதம் அடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு வீட்டுக்கு ரூ.1.70 லட்சம் அலகுத் தொகை வீதம் ரூ.1,700 கோடி திட்ட மதிப்பீட்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணிகளை இந்த அரசு மேற்கொண்டு உள்ளது. இதற்கான திட்டச்செலவில் ரூ.720 கோடியை மத்திய அரசு தனது பங்காக ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன். மீதமுள்ள ரூ.980 கோடியை மாநில அரசின் பங்குத் தொகையாக தமிழ்நாடு ஊரக வீட்டு வசதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் மூலம் கடன் பெற்று இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

* மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 3 வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்க் கோட்டம் ஒன்று இந்த நிதி ஆண்டில் உருவாக்கப்படும்.

விரிவான விபத்து காப்பீட்டு திட்டம்

* வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் பயனளிக்கும் வகையில், விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஒன்றை இந்த அரசு விரைவில் அறிமுகப்படுத்தும். இத்திட்டத்தின் மூலம், இயற்கை மரணம் மற்றும் விபத்தால் ஏற்படும் மரணத்தின் போது வழங்கப்படும் இழப்பீட்டு தொகை, முறையே ரூ.2 லட்சம் மற்றும் ரூ.4 லட்சமும், விபத்தால் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்காக வழங்கப்படும் இழப்பீட்டு தொகை ரூ.1 லட்சமும் என உயர்த்தி வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான காப்பீட்டு கட்டணத் தொகைக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* மாற்றுத்திறனாளிகளுக்கு 3 ஆயிரம் பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 3 ஆயிரம் சிறப்பு நாற்காலிகளும் வழங்கப்படும்.

* மாணவர்களுக்கு ரூ.1,362 கோடியில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.

* காவல் துறையில் 9,975 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

மின்சார பஸ்கள்

* சென்னை, மதுரை, கோவையில் 2 ஆயிரம் மின்சார பஸ்கள் இயக்கப்படும்.

* ராமேசுவரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய கலை-அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.

* இந்த நிதி ஆண்டில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ், புதிய பயிர்களையும், பகுதிகளையும் சேர்க்க இந்த அரசு அறிவிக்கை செய்ய உள்ளது. குறிப்பிட்ட பகுதிக்குள் ஏற்படும் இடர்பாடுகளான ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளோடு இடிமின்னலுடன் கூடிய திடீர் மழை மற்றும் இயற்கை தீயினால் ஏற்படும் பாதிப்புகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்படும். இந்த நிதி ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்கான காப்பீட்டு கட்டணத்தில் மாநில அரசின் பங்குத் தொகைக்காக ரூ.621.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மீன்பிடி துறைமுகங்கள்

* ரூ.420 கோடி திட்ட மதிப்பீட்டில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி மற்றும் திருவொற்றியூர் குப்பம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்களை கட்டுவதற்கு இந்த அரசு அனுமதி அளித்துள்ளதுடன், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீரோடி, மார்த்தாண்டத்துறை மற்றும் வில்லவிளை ஆகிய இடங்களில் கடலரிப்பு தடுப்பான்களை ரூ.116 கோடி செலவில் அமைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.

* வரும் ஆண்டில் 80 ஆழ்கடல் மீன்பிடி படகு குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160 ஐசாட்-2 செயற்கைகோள் தொலைபேசிகள் மற்றும் 160 நேவ்டெக்ஸ் கருவிகளையும் அரசு வழங்கும்.

* அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இத்திட்டத்திற்காக, வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சுய பயன்பாட்டிற்கு மின்சாரம் உற்பத்தி செய்து வழங்குவதற்கான சூரியஒளி மின்திட்டத்தை, நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.132.80 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கட்டுக்குள் கடன் அளவு

* கடந்த ஆண்டு (2018-2019) பட்ஜெட்டில் மொத்த வரி வருவாய் ரூ.1,80,618 கோடியே 71 லட்சமாகவும், வருவாய் செலவினம் ரூ.1,99,937 கோடியே 73 லட்சமாகவும் இருந்தது. அதாவது, வருவாய் பற்றாக்குறை ரூ.19,319 கோடியே 2 லட்சமாக இருந்தது.

இந்த ஆண்டு (2019-2020) பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14,314 கோடியே 76 லட்சமாக குறையும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது, மொத்த வரி வருவாய் ரூ.1,97,721 கோடியே 17 லட்சமாகவும், வருவாய் செலவினம் ரூ.2,12,035 கோடியே 93 லட்சமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிதி ஆண்டில் அனுமதிக்கப்பட்ட நிகர கடன் அளவு ரூ.51,800 கோடியாக இருந்தாலும், ரூ.43 ஆயிரம் கோடி அளவுக்கு நிகர கடன் பெற உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே, 2020-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி, நிகர நிலுவைக் கடன்கள் ரூ.3,97,495 கோடியே 96 லட்சம் என்ற அளவில் இருக்கும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் இந்த நிலுவைக் கடன் அளவு 23.02 சதவீதமாக இருக்கும் என்பதால், அனுமதிக்கப்பட்ட 25 சதவீத அளவுக்கு உள்பட்டே இந்த கடன் அளவு இருக்கும்.

மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்று உள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.