Breaking News
எத்தனை முறை மோடி வந்தாலும் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி காலூன்ற முடியாது மு.க.ஸ்டாலின் பேச்சு

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளி விழா ஆண்டையொட்டி அருந்ததியர் அரசியல் மாநாடு நேற்று மாலை நடந்தது. இதற்கு பேரவை நிறுவன தலைவர் அதியமான் தலைமை தாங்கினார்.

மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநாடு நிறைவு பேரூரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

அடிதட்டு மக்களை பற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு கவலை இல்லை. சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. மத்தியில் நடப்பது மோடி அரசு அல்ல. அது மோசடி அரசாகும். ஏனென்றால் கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் 5 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு எதையும் செய்யவில்லை. இதனால் டெல்லியில் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தினார்கள். இது நாட்டிற்கே அவமானம்.

தமிழகத்துக்கு எத்தனை முறை பிரதமர் மோடி வந்து சென்றாலும், இங்கு அவர்களால் (பா.ஜனதா) காலூன்ற முடியாது. ஏனெனில் அவர்களுக்கு காலே இல்லை. நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவதாக அறிவித்துள்ளார்கள். அது தேர்தலில் ஓட்டுக்கு கொடுக்கப்படும் லஞ்சம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு சலுகை அளிக்கலாம். ஆனால் உயர் சாதியினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதை ஒருபோதும் ஏற்க முடியாது.

ஜெயலலிதாவின் கார் டிரைவரான எடப்பாடியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது சகோதரர் தனபால் குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. எனவே, அ.தி.மு.க. ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், தீரன் சின்னமலையின் படைத்தளபதியாகவும், அருந்ததியர் மக்களின் விடுதலை போராட்ட வீரராகவும் திகழ்ந்த பொள்ளானுக்கு உருவச்சிலையுடன் கூடிய நினைவிடம் அமைக்கப்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.