நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் திட்டம் என்ன?
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, தமிழகத்தில் கூட்டணி தொடர்பான திரை மறைவு வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுகின்றன.
அதேபோல், தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம்பெறும் என்று தெரிகிறது. மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 23 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, பெரம்பலூர், நாமக்கல் ஆகிய 8 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இதில், பெரம்பலூர் தொகுதி கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சிக்கும், நாமக்கல் தொகுதி மற்றொரு கூட்டணியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் பா.ஜ.க. வழங்க இருக்கிறது. இந்த 2 கட்சிகளும் பா.ஜ.க.வின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
இதேபோல், பா.ம.க.வுக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆரணி, சிதம்பரம் உள்பட 4 தொகுதிகள் வழங்கப்படுகின்றன. ராஜ்ய சபா எம்.பி.யும் ஒன்று தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க.வுக்கு கள்ளக்குறிச்சி உள்பட 3 தொகுதிகள் ஒதுக்கப்பட இருக்கிறது. இந்த கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி வழங்கப்பட இருக்கிறது. அந்த தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருக்கிறார். புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படுகிறது. இதுதான் அ.தி.மு.க.வின் கூட்டணி கணக்கு என்று சொல்லப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 27 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு (புதுச்சேரி உள்பட) 8 தொகுதிகளும், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட இருக்கின்றன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும் தி.மு.க. பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அந்த கட்சியும் கூட்டணியில் இணைந்தால் மயிலாடுதுறை தொகுதியை வழங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. தான் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றை குறைத்துக்கொள்ளவும் தி.மு.க. தயாராக இருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்று இன்னும் முடிவு செய்யப்படாத பட்சத்தில், 40 தொகுதிகளுக்கும் தலா 3 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தயாரித்து வழங்கியுள்ளனர்.
இதேபோல், அ.தி.மு.க.வும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்று அடையாளம் கண்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 41 தொகுதிகளில் 8-ல் மட்டுமே வெற்றி பெற்றது அ.தி.மு.க. வுக்கு சாதகமாக அமைந்தது. அதேபோன்ற சூழ்நிலையை நாடாளுமன்ற தேர்தலிலும் ஏற்படுத்த அ.தி.மு.க. வியூகம் அமைத்து வருகிறது.
தி.மு.க.வில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை பார்த்து அ.தி.மு.க. போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தி.மு.க. நேரடியாக போட்டியிடும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கவும் அ.தி.மு.க. முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற வியூகத்தால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்றும் அ.தி.மு.க. கருதுகிறது.
பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் தங்களது கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டாலும், இரண்டு கட்சிகளுக்கும் தலா 8 தொகுதிகளே வழங்கப்பட உள்ளது. எது எப்படி இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தங்களது கூட்டணியை அறிவிக்க இருக்கின்றன.