நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கேட்டு வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணை
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணை ஆணையம் முன்பு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய வெளிநாட்டு டாக்டர்கள் உள்பட பலர் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விசாரணை ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
அப்பல்லோ ஆஸ்பத்திரி 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தரமான சிகிச்சை அளிப்பதனால், பல விருதுகளை சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பெற்றுள்ளது.
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி எங்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அதே ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
அவர் இறந்து 9 மாதங்களுக்கு பின்னர், அவர் சாவில் மர்மம் உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை தமிழக அரசு 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி அமைத்து உத்தரவிட்டது.
இதன்படி விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தில் கேட்கப்படும் அனைத்து விளங்கங்களையும் எங்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்து வருகிறது. இ.சி.ஜி., எக்ஸ்ரே உள்ளிட்ட அறிக்கைகளும் ஏராளமாக தாக்கல் செய்யப்பட்டன. எங்கள் ஆஸ்பத்திரி டாக்டர்கள் உள்பட 55 டாக்டர்கள், 11 நர்சுகள், 6 தொழில்நுட்ப வல்லுனர்கள் என்று ஏராளமானோர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர்.
இதுதவிர ஜெயலலிதா சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரியில் உள்ள அறையையும் விசாரணை ஆணையம் சார்பில் நேரில் வந்து ஆய்வு செய்யப்பட்டது. அதன் பின்னரும் விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளினால், எங்கள் ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.
ஏன் என்றால், விசாரணை ஆணையம் தேவையில்லாத விவரங்களை எல்லாம் கேட்கிறது. மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். 1984-ம் ஆண்டு எங்கள் ஆஸ்பத்திரியில் பெற்ற சிகிச்சை விவரங்கள், அவரை வெளிநாடு அழைத்துச்செல்ல பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உள்ளிட்டவைகளை எல்லாம் தாக்கல் செய்ய உத்தரவிடுகிறது.
இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதாவின் மரணம் குறித்து தான் விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, டாக்டர்கள் அளிக்கும் சாட்சியத்திலும், மருத்துவம் தொடர்பான வார்த்தைகளிலும் சில மாற்றி பதிவு செய்யப்படுகிறது. உதாரணத்துக்கு நொடிக்கு பதில் நிமிடம் என்று பதிவு செய்யப்படுகிறது.
அரசு டாக்டர்கள் சாட்சியம் அளிக்கும்போது, அவர்களை குறுக்கு விசாரணை செய்ய எங்கள் ஆஸ்பத்திரி தரப்புக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை.
எனவே, மருத்துவ விவரங்கள் புரிந்துகொள்ள முடியாததால், 21 துறைகளை சேர்ந்த டாக்டர்களை கொண்ட குழுவை அமைக்கும்படி கடந்த டிசம்பர் மாதம் எங்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையையும் ஆணையம் நிராகரித்துவிட்டது.
எனவே, இந்த ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தினால், ஆஸ்பத்திரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். அதனால், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக 21 துறைகளை சேர்ந்த தன்னிச்சையான டாக் டர்கள் குழு அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை, சிகிச்சை குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கவேண்டும். ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக எங்கள் ஆஸ்பத்திரி தரப்புக்கு விலக்கு அளிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.