ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர், ஒரு நாள் போட்டி தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது.
இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 24–ந் தேதி விசாகப்பட்டினத்திலும், 2–வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி 27–ந் தேதி பெங்களூருவிலும், முதலாவது ஒரு நாள் போட்டி மார்ச் 2–ந் தேதி ஐதராபாத்திலும், 2–வது ஒரு நாள் போட்டி 5–ந் தேதி நாக்பூரிலும், 3–வது ஒரு நாள் போட்டி 8–ந் தேதி ராஞ்சியிலும், 4–வது ஒரு நாள் போட்டி 10–ந் தேதி சண்டிகாரிலும், 5–வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி 13–ந் தேதி டெல்லியிலும் நடைபெறுகிறது.
இந்திய அணி இன்று அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு மும்பையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் கூடி அணியை தேர்வு செய்கின்றனர்.
இங்கிலாந்தில் மே 30–ந் தேதி தொடங்கும் உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும். இதனால் உலக கோப்பை போட்டியை மனதில் கொண்டு இந்த அணி தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விராட்கோலி, பும்ரா திரும்புகிறார்கள்
துணை கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கு 20 ஓவர் போட்டியில் ஓய்வு அளிக்கப்படக்கூடும். இதேபோல் ஒரு நாள் போட்டியில் சில ஆட்டங்களில் ஷிகர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். நியூசிலாந்து பயணத்தில் பாதியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் விராட்கோலி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணிக்கு திரும்புகிறார்கள். 3–வது தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் இடம் பெறலாம்.
உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியில் ஏறக்குறைய 13 வீரர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டனர். எஞ்சிய 2 இடத்துக்கு தான் போட்டி நிலவுகிறது. இந்த போட்டி தொடரின் மூலம் எஞ்சிய 2 வீரர்கள் முடிவு செய்யப்பட இருப்பதால் இந்த அணி தேர்வு மிக முக்கியமாக கருதப்படுகிறது. 2–வது விக்கெட் கீப்பர் தேர்வில் ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக் இடையே பலத்த போட்டி இருக்கும்.