Breaking News
உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ரிஷாப் பான்டை சேர்க்க வேண்டும் நெஹரா கருத்து

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷாப் பான்டை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹரா தெரிவித்தார்.
ரிஷாப் பான்டை தேர்வு செய்ய வேண்டும்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹரா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

ஒரு அணியில் எப்பொழுதும் பங்களிப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய வீரர்கள் தேவையாகும். ரிஷாப் பான்ட் வெறும் பங்களிப்பாளர் அல்ல. அவர் ஒரு தரமான மேட்ச் வின்னர். அவரை உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையை நீங்கள் பார்த்தால் ஷிகர் தவானை தவிர முதல் 7 வீரர்களில் இடது கை பேட்ஸ்மேன் யாரும் இல்லை. அணியில் இடது, வலது கை பேட்ஸ்மேன்கள் இணைந்து ஆடுவது எதிரணிக்கு சிக்கலை உருவாக்கும். நமக்கும் வலது மற்றும் இடது கை பேட்ஸ்மேன் அவசியமானதாகும். அதற்கு பொருத்தமானவராக ரிஷாப் பான்ட் இருப்பார். அத்துடன் ரிஷாப் பான்ட் 1 முதல் 7 வரையிலான வரிசையில் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடியவர். விராட்கோலி மற்றும் அணி நிர்வாகம் ரிஷாப் பான்டை எந்த நிலையிலும் தேவைக்கு தகுந்தபடி பயன்படுத்தி கொள்ள முடியும்.
மெகா சிக்சர் அடிக்கக்கூடியவர்

ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக எளிதாக மெகா சிக்சர்களை அடிக்கக்கூடிய திறமை படைத்தவர் ரிஷாப் பான்ட். அவரது அச்சமில்லாத பேட்டிங் நெருக்கடியான நேரத்தில் அணிக்கு உதவும். இது போன்ற பேட்ஸ்மேன் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு தேவையாகும். இந்திய அணியில் விராட்கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகிய 3 மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். என்னை பொறுத்தமட்டில் 4–வது மேட்ச் வின்னர் ரிஷாப் பான்ட் தான்.

அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறந்த வீரர்கள் தான். ஆனாலும் அவர்கள் 3 பேரும் ஒரே மாதிரியாக விளையாடக்கூடியவர்கள். நமது அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் தேவை. அதற்கு ரிஷாப் பான்ட் தகுதியானவர். ரிஷாப் பான்ட் தொடக்க வீரர். தினேஷ் கார்த்திக் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். டோனி விக்கெட் கீப்பிங் செய்வதால், ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோரை சிறப்பு பேட்ஸ்மேன்களாக கருதி தேர்வு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.