கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கவுண்ட்டவுன் தொடங்கி விட்டது -அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ் வளர்ச்சிக்கு தொண்டாற்றியதால் “தமிழ் தாத்தா” என்று போற்றப்படும் உ.வே.சா.வின் 165ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னையில் மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள உ.வே.சா. உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டணி அறிவிப்பு குறித்த கேள்விக்கு எல்லாமே தகவல்தான் என்று பதிலளித்த ஜெயக்குமார், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என துணைமுதலமைச்சர் ஓபிஎஸ் தெளிவாகவே கூறி உள்ளார்.
எனவே இன்னும் 48 மணி நேரம் இருக்கிறது. கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. கூட்டணி விவகாரத்தில் அதிமுக தெளிவாக உள்ளது. கூட்டணி விஷயத்தில் எந்த தாமதமும் இல்லை, நாங்கள் எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம், திமுக சரக்கு ரயில் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
சிடிஎஸ் எனும் ஐ.டி. நிறுவனத்தாரிடம் தமிழக அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டை திமுக தலைவர் எழுப்பியிருப்பது குறித்து கேட்டபோது, மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.