வங்கதேச அடுக்குமாடி குடியிருப்பில் தீ : 69 பேர் பலி
வங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 பேர் பலியாகி உள்ளனர்.
வங்கதேச தலைநகர் தாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி, ரசாயன பொருட்கள் வைத்திருக்கும் குடோனாகவும் செயல்பட்டு வந்துள்ளது. ரசாயன பொருட்களில் ஏற்பட்ட தீ பரவிய, அடுக்கு மாடி குடியிருப்பு முழுவதும் பரவியது. இதில் 69 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் வரை வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைத்து, கட்டிடத்திற்குள் சிக்கி உள்ளவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். கேஸ் சிலிண்டரில் இருந்து கசிந்த கேஸ், ரசாயன பொருட்கள் மீது பட்டதே தீ விபத்து ஏற்பட காரணமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீ, நான்கு அடுக்குமாடி முழுவதும் பரவி உள்ளது. வீடுகளிலும் ரசாயன பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தீ வேகமாக பரவ காரணமாக அமைந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். தீ விபத்தில் கட்டிடத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள், 10 சைக்கிள் ரிக்ஷாக்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. 200 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர். தீ பரவியதும் அப்பதியில் கூட்டம் கூடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், உள்ளே சிக்கியவர்கள் வெளியேற வழியில்லாமல் போனதாலேயே அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது.