Breaking News
முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இன்று மோதல்

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆட உள்ளது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கவுகாத்தியில் இன்று (காலை 11 மணி) நடக்கிறது. இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் காயத்தால் ஆடாததால் அவருக்கு பதிலாக ஸ்மிரிதி மந்தனா அணியை வழிநடத்த இருக்கிறார். அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் அதற்கு தயாராகும் வகையில் சில இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பரிசோதனை முயற்சி இருக்கும் என்றாலும் தொடரை கைப்பற்றுவதே தங்களது முக்கிய இலக்கு என்று கேப்டன் மந்தனா கூறினார்.

பெண்களுக்கான ஒரு நாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம் வகிக்கும் மந்தனா மேலும் கூறுகையில் ‘சிறு வயதில் விளையாடத் தொடங்கியதில் இருந்தே, உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நினைப்பு இருந்து கொண்டே இருக்கிறது. தனிப்பட்ட முறையில் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க விரும்பினேன். அது நடந்து விட்டது. அந்த இடத்தை தொடர்ந்து தக்க வைக்க வேண்டியது முக்கியம். அதற்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் எனது பிரதான லட்சியம் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தான்’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.