அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க., பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி இடம் பெற்றுள்ளது.
தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு இடமும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க. வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் நேற்றிரவு 8.45 மணிக்கு அ.தி.மு.க. தலைமை கழகம் வந்தனர்.
பின்னர் அவர்கள், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது புதிய நீதி கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
இதற்கான உடன்படிக்கையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம் ஆகியோர் கையெழுத்திட்டனர். 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் புதிய நீதி கட்சி, அ.தி.மு.க.வை ஆதரிக்கும் என்று உடன்பாடு அறிவிப்பை வெளியிட்டு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். புதிய நீதி கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிட உள்ளார்.
இதுகுறித்து ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய சீதனம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம் அளிக்கிறது. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.