Breaking News
தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே! – சித்தார்த்துக்கு எச்.ராஜா பதிலடி

பிரதமர் மோடி பேச்சு தொடர்பான சித்தார்த்தின் ட்வீட்டுக்கு, பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனத்துக்கு பிரதமர் மோடி, “நாம் ராணுவத்தினரை நம்புவதும் நாம் அவர்களை நினைத்துப் பெருமைப் படுவதும் இயற்கையான ஒன்று. ஆனாலும் எனக்கு ஒன்று புரியவில்லை. ஏன் ராணுவப் படையினரை சிலர் கேள்வி கேட்கின்றனர்” என்று பொதுக்கூட்டமொன்றில் பேசினார்.

இந்தியப் பிரதமரின் ட்விட்டர் கணக்கில் இப்பேச்சை ட்வீட் செய்தார்கள். அதனைக் குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “நம் மக்கள் நம் நாட்டு ராணுவத்துடனும் ராணுவ வீரர்கள் பக்கமும்தான் நிற்கிறார்கள். நீங்களும் உங்கள் கும்பலைச் சேர்ந்தவர்களும்தான் நம்புவதில்லை. முதலில் புல்வாமாவை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்.

உண்மையான ஹீரோக்கள் பின்னால் ஒளிந்து கொண்டு நிஜ ஹீரோக்களாக பாசாங்கு செய்ய வேண்டாம். நீங்கள்தான் படையினரை மதிக்க வேண்டும். நீங்கள் ராணுவ வீரர் இல்லை, அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்” என்று தெரிவித்தார்.

சித்தார்த்தின் ட்வீட் வைரலாகப் பரவியது. இதனைக் குறிப்பிட்டு பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “26/11 பயங்கரவாதத் தாக்குதலின் போது நூற்றுக்கணக்கானோர் ஒன்று கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். அப்போது விமானப்படையினர் தாக்குதல் நடத்துகிறோம் என்று கேட்டதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அனுமதியளிக்கவில்லை. ஆனால் மோடி அரசு படையினருக்கு சுதந்திரம் அளித்துள்ளது. எனவே ஒரு நடிகர் தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே!” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.