கள்ளக்காதலுக்கு இடையூறு: விமானத்தில் வந்து மனைவியை கொலை செய்த ராணுவ வீரர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள பி.திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31). இவரது மனைவி கவுதமி (29). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன், மகள் உள்ளனர். ராஜேஷ் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கவுதமி கடந்த 5-ந் தேதி காலை வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தலையணையால் முகத்தை அமுக்கி யாரோ கொலை செய்திருந்தனர். இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கள்ளத்தொடர்பு
கவுதமியின் கணவர் ராஜேசுக்கும், கர்நாடக மாநிலம் தும்கூர் சதாசிவம் நகரை சேர்ந்த கலைவாணி (30) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து அறிந்த கவுதமி அவரது கணவரை கண்டித்துள்ளார். இந்தநிலையில் ராஜேஷ் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இதனால் கவுதமியை, ராஜேஷ் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரை தேடி வந்தனர்.
ராஜேஷ் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் போலீசாரிடம் பிடிபட்டார். அப்போது அவர் தனது கள்ளக்காதலி தூண்டுதலின் பேரில் தான், கவுதமியை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ராஜேசையும், அவரது கள்ளக்காதலி கலைவாணியையும் போலீசார் கைது செய்தனர். கைதான ராணுவ வீரர் ராஜேஷ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
கொலை திட்டம்
எனக்கும், கலைவாணிக்கும் கடந்த 1½ ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இது குறித்து அறிந்த கவுதமி என்னை கண்டித்தார். இது குறித்து நான் எனது கள்ளக்காதலி கலைவாணியிடம் கூறினேன். அதற்கு அவள் உனது மனைவி உயிருடன் இருக்கும் வரை நமது கள்ளத்தொடர்பை தொடர முடியாது என்று கூறினாள்.
இதனால் நான் எனது மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டேன். இதற்காக நான் விடுமுறை எடுத்து ஜோத்பூரில் இருந்து விமானத்தில் பெங்களூருவிற்கு வந்தேன். பிறகு அங்கிருந்து கடந்த 4-ந் தேதி இரவு பி.திப்பனப்பள்ளியில் உள்ள வீட்டிற்கு வந்தேன். எனது குழந்தைகள் 2 பேரும் அவருடைய தாத்தா, பாட்டி வீட்டில் இருந்தனர். வீட்டில் இருந்த எனது மனைவியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.
நாடகம் ஆடினேன்
பின்னர் அவர் தூங்கிய நேரத்தில் தலையணையால் அவரது முகத்தை அமுக்கி கொலை செய்தேன். பின்னர் வீட்டில் அவர் அணிந்திருந்த தாலி சங்கிலி, தோடு, நகைகளை எடுத்து கொண்டு இரவோடு, இரவாக சென்னைக்கு புறப்பட்டு சென்றேன். அங்கு சேட்டு ஒருவரிடம் அந்த நகைகளை வைத்து பணம் வாங்கினேன்.
நகைக்காக இந்த கொலை நடந்ததாக திசை திருப்ப நாடகம் ஆடினேன். ஆனால் போலீசார் என்னை கண்டு பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.