Breaking News
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து: ‘தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது’ மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

மத்திய அரசின் நிதியுதவியுடன் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து, உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை ஐகோர்ட்டு ரத்து செய்திருக்கிறது. விவசாயிகளை அழைத்து பேசுங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டசபையில் நான் முன்வைத்த கோரிக்கையைக் கூட ஏற்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி. இத்திட்டத்தை எதிர்த்து வழக்குப்போட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்ட பிறகு சேலம் 8 வழிச்சாலை பற்றி பேசுவதையே தவிர்த்தார். எடப்பாடியும், அன்புமணியும் கூட்டணி வைத்துக்கொண்டனர். ஆனால் விவசாயிகளை ஐகோர்ட்டு இந்த தீர்ப்பின் மூலம் காப்பாற்றியிருக்கிறது. தீர்ப்பை கேட்டு பட்டாசு வெடித்து விவசாயிகள் கொண்டாடியிருப்பதும், தங்களின் நிலங்களில் போட்ட கல்களை பிடுங்கி எறிந்திருப்பதும் இந்த தீர்ப்பு மக்களுக்கு தந்துள்ள மகிழ்ச்சியை காட்டுகிறது.

மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது. விவசாயிகளை கொடுமைப்படுத்திய எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி உடனடியாக அறிவிக்க வேண்டும். சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்காக வழக்குப்போட்ட பா.ம.க. இந்த வாக்குறுதியை அ.தி.மு.க. அரசிடமிருந்து பெற வேண்டும். அப்படி வாக்குறுதி அளிக்க தவறினால் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேறுமா?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை-சேலம் இடையிலான 8 வழி பசுமை சாலை திட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பு 5 மாவட்ட விவசாயிகள் நலனைக் காப்பதற்காக பா.ம.க. சார்பில் நான் மேற்கொண்ட சட்டப்போராட்டத்திற்கும், விவசாயிகளுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்.

பசுமை வழிச்சாலை திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டை மத்திய, மாநில அரசுகளிடம் பா.ம.க. வலியுறுத்தும்; வெற்றி பெறும். இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்யக்கூடாது. இந்த வழக்கில் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டில் எனது சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்படும்.

அதே நேரத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக தி.மு.க. ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. சட்டசபையில் கூட, 8 வழிச்சாலை திட்டத்தை நாங்கள் (தி.மு.க.) எதிர்க்கவில்லை; மக்களிடம் கருத்துக்கேட்டுவிட்டு திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று தான் கூறுகிறோம் என சொல்லியவர் தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த திட்டத்திற்கு ஆதரவாக ஐகோர்ட்டில் வாதிட்டவர் தி.மு.க. தலைமை நிலைய வழக்கறிஞர் வில்சன். எனவே தி.மு.க.வின் இரட்டைவேட துரோக கூட்டணிக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மோடி அரசும், பழனிசாமி அரசும் சேர்ந்து செயல்படுத்த துடித்த சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் உணர்வுப்பூர்வமான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. சுயநலத்திற்காக எதையும் செய்யத் தயங்காத பழனிசாமிக்கும், அவருக்கு ஆதரவாக நின்ற மு.க.ஸ்டாலினுக்கும் ஐகோர்ட்டு தீர்ப்பு சம்மட்டி அடியாக அமைந்திருக்கிறது.

தேர்தல் முடிந்தவுடன் சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனவே அவர்களையும், தி.மு.க.வையும் மொத்தமாக வீட்டுக்கு அனுப்பினால் தான், இந்த திட்டம் முழுமையாக ரத்தாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்த தீர்ப்பினை ஏற்று தமிழக அரசு ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் பா.ம.க. இரட்டை வேடம் போடாமல் 8 வழிச்சாலையை எதிர்ப்பது உண்மையானால், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து இருப்பதை முறித்துக்கொள்ள வேண்டும். கூட்டணி தொடரும் பட்சத்தில் 8 வழிச்சாலை பற்றி பேச டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு தார்மீக உரிமையில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், சமத்துவ மக்கள் கழக நிறுவனர் ஏ.நாராயணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உள்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.