Breaking News
இலங்கை செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை: மீண்டும் தாக்குதல் நடக்கும் என அறிவுறுத்தல்

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு செல்லும் தனது நாட்டினருக்கு அமெரிக்கா நேற்று எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கையில், பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்தோ அல்லது விடுக்காமலோ மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும். சுற்றுலா தலங்கள், போக்குவரத்து வாகனங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள், ஓட்டல்கள், கிளப்புகள், உணவு விடுதிகள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது.

எனவே, இலங்கைக்கு செல்லும் அமெரிக்கர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

சுற்றுலா தலங்கள் மற்றும் நெரிசல் மிகுந்த இடங்களில் செல்லும்போது, சுற்றிலும் நடப்பனவற்றில் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றுங்கள். ஊடகங்களில் உடனடி செய்திகளை கவனியுங்கள். அதற்கேற்ப உங்கள் பயண திட்டத்தை மாற்றி அமையுங்கள். அமெரிக்க வெளியுறவுத்துறை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் நடப்பு நிலவரத்தை பார்த்து வாருங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோல், கனடாவும் இலங்கை செல்லும் தனது நாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கனடா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வெளிநாடுகளில் கனடா மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, கனடா அரசு அவ்வப்போது நம்பகமான தகவல்களை அளித்து வருகிறது. அதற்கேற்ப கனடா நாட்டினர் தங்களது பயண திட்டத்தை வகுத்து கொள்ளலாம்.

இலங்கைக்கு செல்வது உங்களது விருப்பம். வெளிநாடுகளில் உங்களது தனிப்பட்ட பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.