இலங்கை தொடர் குண்டு வெடிப்புகளில் பலியானோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு
இலங்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்டர் பண்டிகையன்று 3 தேவாலயங்கள், 3 ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. நேற்றுமுன்தினம் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தபோது குண்டு வெடித்தது.
மேலும், கொழும்பு பஸ் நிலையத்திலும், சர்வதேச விமான நிலையம் அருகிலும் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. அடுத்தடுத்த சம்பவங்களால் நாடு முழுவதும் பீதி நிலவி வருகிறது. இந்த குண்டு வெடிப்புகளில் சிக்கி 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் நேற்று மாலை நிலவரப்படி, 321 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்தனர். இன்று காலை வெளியான தகவலின் படி உயிரிழப்பு 359 ஆக உயர்ந்துள்ளது.