Breaking News
உளவுத்துறையின் தகவல்களை யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை: இலங்கை அதிபர்

இலங்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்டர் பண்டிகையன்று 3 தேவாலயங்கள், 3 ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. நேற்றுமுன்தினம் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தபோது குண்டு வெடித்தது. மேலும், கொழும்பு பஸ் நிலையத்திலும், சர்வதேச விமான நிலையம் அருகிலும் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. அடுத்தடுத்த சம்பவங்களால் நாடு முழுவதும் பீதி நிலவி வருகிறது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு இலங்கையில் அவசர நிலை அமலுக்கு வந்தது.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. நியூசிலாந்து மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே, இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து இருப்பதாக இலங்கை ராணுவ துணை மந்திரி ருவன் விஜேவர்த்தனே தெரிவித்தார். இலங்கையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய உளவுத்துறை தகவல் பரிமாறியதாகவும் ஆனால், அதை பொருட்படுத்ததாதே இந்த பெருந்துயருக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. உளவுத்தகவல்களை புறக்கணித்ததற்காக மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த நிலையில், தீவிரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையின் தகவல்களை யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று இலங்கை அதிபர் சிறிசேன பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், தகவல் கிடைத்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுத்திருப்பேன் எனவும், இலங்கை பாதுகாப்புத்துறை தலைவர்கள் மாற்றப்பட்டு, பாதுகாப்பு பிரிவு முற்றிலும் சீரமைக்கப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது சிறிசேனா தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.