தமிழகம் முழுவதும் போலீசாரின் தபால் ஓட்டுக்கள் 100 சதவீதம் பதிவானதுதலைமை தேர்தல் அதிகாரி தகவல்
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
4 அடுக்கு பாதுகாப்பு
தமிழகத்தில் 45 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன. அங்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் சி.ஆர்.பி.எப். படையினர், இரண்டாம் அடுக்கில், மாநிலத்தைச் சேர்ந்த ஆயுதப்படை போலீசார், மூன்றாவது அடுக்கில், ஆயுதப்படை ரிசர்வ் போலீசார், 4-வது அடுக்கில், சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசார் என தமிழகம் முழுவதும் மொத்தம் 7,922 பேர் தற்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தவும் வாய்ப்புள்ளது. ஓட்டு எண்ணும் தேதியன்று பாதுகாப்புக்காக இன்னும் அதிகமாக போலீசார் குவிக்கப்படுவார்கள்.
ரகசிய கேமராக்கள்
ஒரு மையத்துக்கு சுமார் 30 முதல் 40 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அறைகளுக்கு மட்டும் அல்லாமல் மையத்தின் சுற்றுப்புறங்களிலும் அவை பொருத்தப்பட்டுள்ளன. கோவையில் அரை நாள் மட்டும் அந்த கேமராக்கள் வேலை செய்யாமல் இருந்ததாக புகார்கள் வந்தன. அவை சரி செய்யப்பட்டுவிட்டன.
ஓட்டு எண்ணிக்கை அன்று பாதுகாப்புக்காக தற்போது தமிழகத்திற்கு 13 கம்பெனி துணை ராணுவம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 26-ந் தேதியன்று (இன்று) தமிழகத்துக்கு வருவார்கள்.
மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த ஸ்டோர் ரூமுக்குள் பெண் அதிகாரி சென்ற சம்பவம் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பிவிட்டேன்.
போலீசார் ஓட்டு
23-ந் தேதி வரையில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 592 தபால் ஓட்டுக்கள், தேர்தல் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 632 ஓட்டுக்கள் பதிவு செய்து திரும்ப அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தபால் ஓட்டுக்களை அளிக்கவும் கால அவகாசம் உள்ளது.
தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 398 தேர்தல் பணிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்கள் வாக்குப்பதிவு நாளன்று, வாக்குப்பதிவு எந்திரங்களில் ஓட்டு போட்டிருப்பார்கள்.
போலீசாருக்கு 90 ஆயிரத்து 2 தபால் ஓட்டுக்கள் வழங்கப்பட்டு இருந்தன. அவை மொத்தமும் பதிவு செய்யப்பட்டு திருப்பித் தரப்பட்டுவிட்டன. அந்த வகையில் போலீசாருக்கான தபால் ஓட்டுக்கள் 100 சதவீதம் பதிவாகியுள்ளன.
நடிகர்கள் விவகாரம்
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் வாக்களித்த விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறோம். ஸ்ரீகாந்த், சாலிகிராமத்தில் உள்ள காவிரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள 102-ம் வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு செய்துள்ளார்.
அவர்கள் வாக்களிக்க வந்தபோது அரசியல் கட்சி முகவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என்பது, தொடர்ந்து நடத்தப்படும் விசாரணையில்தான் தெரியவரும். இந்த விசாரணையை ஆர்.ஓ. மேற்கொண்டு வருகிறார்.
நடிகர் மீது நடவடிக்கையா?
பெயர் இல்லாத நிலையில் வாக்களித்த நடிகர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை முடிவு செய்வதற்கு முன்பு, அவர்களை அனுமதித்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும். அதோடு, வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர் நீக்கப்பட்டது பற்றியும் விசாரிக்கக் கூறியிருக்கிறேன்.
வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் என்ற வேறு பெயர்களில் வாக்களித்தார்களா என்பதையும் விசாரித்து அறிய வேண்டும். ஒரே பெயர் இருக்கும் நிலையில், தனது பெயர் என்று நினைத்து தெரியாமல் வாக்களித்துவிட்டார்களா? என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். விரிவான விசாரணைக்குப் பின்புதான் அது தெரியவரும்.
சிக்கும் அதிகாரிகள் யார்?
அந்த வாக்குச்சாவடிகளில் இருந்த அனைத்து அதிகாரிகள் மேலும் நடவடிக்கை எடுத்துவிட முடியாது. விரவில் அழியாத மை வைப்பவருக்கு பெயர்ப் பட்டியல் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, நடிகர்களை கையெழுத்திட அனுமதித்தவர்கள் (பி.ஓ.1) நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.
இதுபோல் எங்காவது வாக்களிக்கப்பட்டுள்ளது என்ற புகார் அளிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 10 வாக்குச்சாவடிகள் தவிர வேறு வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு கேட்டு கோரிக்கைகள் வைக்கப்படவில்லை.
அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தலாமா? என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.