Breaking News
30 மற்றும் 1-ந் தேதிகளில் தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை

மழையின் அளவை முன்கூட்டியே கணித்து, அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காகவே இந்த எச்சரிக்கை ‘அலர்ட்’ விடப்படுகின்றன. அந்தவகையில் பச்சை, மஞ்சள், அடர் மஞ்சள் (ஆம்பர்) மற்றும் சிவப்பு நிறங்களில் எச்சரிக்கை 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டாலே பச்சை நிறத்தில் எச்சரிக்கை விடப்படுகிறது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை.

வானிலை மோசமாக உள்ளது என்பதை அறிவுறுத்தும் விதமாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்படுகிறது. இந்த அறிவிப்பு விடப்பட்டால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடிப்படை தேவைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படக்கூடிய அளவுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை உணர்த்த அடர்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த சமயத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்படும். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். பொதுமக்கள் போக்குவரத்தை தவிர்க்க வேண்டும். மக்கள் அடிப்படை தேவைகளுடன் எப்போது வேண்டுமானாலும் மாற்று இடங்களுக்கு செல்ல தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வானிலை மிக மிக மோசமாக மாற வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்குமாறு உணர்த்தவே சிவப்பு நிற எச்சரிக்கை ‘ரெட் அலர்ட்’ விடப்படுகிறது. இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் நிலச்சரிவு, மரங்கள் வேறோடு சரியவும் வாய்ப்பு இருக்கிறது. அனேக இடங்களில் மின் இணைப்பு, போக்குவரத்து துண்டிக்கப்படும். தாழ்வான பகுதிகளில் அதிக சேதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.

அந்தவகையில் வருகிற 28-ந்தேதி பச்சை நிறத்திலும், 29-ந்தேதி மஞ்சள் நிறத்திலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 30-ந்தேதி மற்றும் மே 1-ந்தேதி தமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.