சேலத்தில் என்கவுண்ட்டர்: பிரபல ரவுடி சுட்டுக்கொலை
சேலம் மாவட்டம் காட்டூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). முறுக்கு வியாபாரி. இவர் மேட்டுப்பட்டி காவலூர் பஸ் நிறுத்தம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கணேசன் அடித்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த பிரபல ரவுடி கதிர்வேல் (28) தலைமையிலான கும்பல் கணேசனை கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் கதிர்வேல் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்தனர்.
குண்டு பாய்ந்து சாவு
இந்நிலையில் நேற்று காலை குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியில் கதிர்வேல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரி, பெரியசாமி ஆகியோர் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் கதிர்வேல் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார்.
போலீசார் தடுக்க முயன்றதால் கதிர்வேல் ஒரு கத்தியை எடுத்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரி ஆகியோரை வெட்டினார். இதனால் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி துப்பாக்கியால் தற்காப்புக்காக கதிர்வேலை நோக்கி சுட்டார். இதில் கதிர்வேலின் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இறந்தார்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
உடனடியாக காயமடைந்த இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரி ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கதிர்வேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டது.
அரசியல் பிரமுகர் ஒருவருக்கு கார் டிரைவராக இருந்த கதிர்வேல் மீது கொலை வழக்கு உள்பட 7 வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்திலும் அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சேலத்தில் பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.