Breaking News
பி.எம். நரேந்திரமோடி திரைப்படம் வாக்கு எண்ணிக்கைக்கு அடுத்த நாள் வெளியீடு

பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். ஓமங்க் குமார் இயக்கி உள்ளார். மோடியின் இளமை காலத்து வாழ்க்கையில் இருந்து 2014-ம் ஆண்டு தேர்தலில் வென்று பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், அவர் நிறைவேற்றிய திட்டங்கள் படத்தில் உள்ளன.

இந்த படத்தை அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு ஆதரவு அலையை படம் உருவாக்கும் என்று எதிர்ப்பு கிளம்பியது. படத்தை வெளியிடக் கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும், ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து நேரில் விளக்கம் அளிக்கும்படி மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து படத்தில் மோடியாக நடித்த விவேக் ஓபராய், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார்கள். அதில் மோடி படத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் காட்சிகள் இல்லை என்று விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23 ந்தேதிக்கு அடுத்த நாள் மே 24 ந் தேதி ‘‘பி.எம். நரேந்திரமோடி’’ படத்தை வெளியிட அதன் தயாரிப்பாளர் சந்தீப்சிங் திட்டமிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“பலகட்ட விவாதங்களை அடுத்து திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை மனதில் வைத்து நாங்கள் ஒரு முடிவு செய்துள்ளோம். இப்போது நாங்கள் மே 24ந் தேதி அன்று திரைப்படத்தை வெளியிடுகிறோம்” என கூறி உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.