Breaking News
டெல்லியில் இன்று பா.ஜனதா புதிய எம்.பி.க்கள் கூட்டம்: மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.

இந்நிலையில் பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்காக பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என நரேந்திர மோடி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளார். எனினும் இந்த கூட்டத்தில் நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்.

மேலும் புதிய அரசு அமைப்பது, அந்த அரசில் பங்கேற்கும் மந்திரிகள் யார்? என்பது குறித்தும் பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். புதிய மந்திரிசபையில் கட்சியின் தலைவர் அமித்ஷா உள்ளிட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. அமித்ஷாவுக்கு உள்துறை, நிதித்துறை, வெளியுறவுத்துறை, ராணுவம் ஆகிய முக்கிய பொறுப்புகளில் ஏதேனும் ஒன்று அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே சமயம் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் அவர்களுக்கு மந்திரிசபையில் இடம் அளிக்கப்படுமா? என்பது குறித்தும் கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே மந்திரிகளாக இருந்த ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோருக்கு மீண்டும் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் முக்கிய பதவி புதிய அரசில் அளிக்கப்படும் என தெரிகிறது. அதே சமயம் ராகுல் காந்தியை தோற்கடித்த ஸ்மிரிதி இரானிக்கு மந்திரிசபையில் முக்கிய இலாகா அளிக்கப்பட உள்ளது.

கூட்டணி கட்சிகளான சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கும் மந்திரிசபையில் இடம் ஒதுக்கப்படுகிறது. மேற்கு வங்காளம், ஒடிசா, தெலுங்கானா மாநிலத்தில் வெற்றி பெற்ற புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது 16-வது நாடாளுமன்றத்தை கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மந்திரிகளிடம் ராஜினாமா கடிதமும் பெறப்பட்டது. பின்னர் பிரதமர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்களை சந்தித்த மோடி, தனக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.

அதை தொடர்ந்து நாடாளுமன்ற கலைப்பு தீர்மானம் மற்றும் மந்திரிகளின் ராஜினாமா கடிதத்துடன் ஜனாதிபதி மாளிகைக்கு மந்திரிகளுடன் மோடி சென்றார். அங்கு ராம்நாத் கோவிந்தை சந்தித்து தீர்மானத்தையும், ராஜினாமா கடிதத்தையும் மோடி அளித்தார். ராஜினாமா கடித்ததை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, புதிய அரசு பொறுப்பு ஏற்கும் வரை தொடர்ந்து பிரதமராக நீடிக்குமாறு மோடியை கேட்டுக்கொண்டார். பின்னர் மோடி மற்றும் மந்திரிகளுக்கு ஜனாதிபதி இரவு விருந்து அளித்தார்.

17-வது நாடாளுமன்ற சபையை ஜூன் 3-ந்தேதிக்குள் அமைக்க வேண்டும். தேர்தல் கமிஷனர்கள் முறைப்படி ஜனாதிபதியை சந்தித்து புதிய எம்.பி.க்களின் பட்டியலை அளித்தவுடன் புதிய அரசு அமைவதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.