Breaking News
வங்காளதேசம்-இலங்கை அணிகள் இன்று மோதல்

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 13-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பிரிஸ்டலில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-இலங்கை அணிகள் மோதுகின்றன.

மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. பின்னர் நடந்த ஆட்டங்களில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும், 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடமும் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. வங்காளதேச அணியின் பேட்டிங்கில் ஷகிப் அல்-ஹசனை தவிர யாரும் சிறப்பாக செயல்படவில்லை. அந்த அணியின் பந்து வீச்சும் எதிர்பார்த்தபடி அமையவில்லை. அடுத்தடுத்து சந்தித்த தோல்விகளில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடி அந்த அணிக்கு இருக்கிறது.

கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தது. மழையால் பாதிக்கப்பட்ட 2-வது ஆட்டத்தில் 34 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இலங்கை அணியினர் ஒருங்கிணைந்த ஆட்டத்தை அளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் ஆட முடியாதது இலங்கை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிஸ்டலில் இன்று மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போட்டி மழையால் பாதிக்கப்படலாம். இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

வங்காளதேசம்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், முகமது சைபுதீன், மெஹிதி ஹசன், மோர்தசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரகுமான்.

இலங்கை: கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, திரிமன்னே, குசல் மென்டிஸ், மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, திசரா பெரேரா, இசுரு உதனா, சுரங்கா லக்மல், மலிங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.