ஸ்டம்பில் பந்து பட்டும் பெய்ல்ஸ் விழாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை – விராட்கோலி அதிருப்தி
இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் இருக்கையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய பந்து ஸ்டம்பில் தாக்கியது. ஆனால் ஸ்டம்பின் மீது இருந்த பெய்ல்ஸ் விழவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக டேவிட் வார்னர் அவுட்டில் இருந்து தப்பினார். நடப்பு உலக கோப்பை போட்டி தொடரில் இதுபோல் பலமுறை பெய்ல்ஸ் விழாமல் இருந்து இருக்கிறது. இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘சர்வதேச ஒரு நாள் போட்டியில் இதுபோல் நடப்பதை நான் எதிர்பார்க்கவில்லை. தொழில்நுட்பம் சிறப்பானது தான். வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்து ஸ்டம்பை தாக்கியும் பெய்ல்ஸ் விழாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இது மாதிரி நடப்பது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஸ்டம்பில் என்ன கோளாறு இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுபோன்று நடப்பதை எந்த அணியும் விரும்பாது. கடந்த காலங்களில் இதுபோல் அதிகம் நடந்ததை நான் பார்த்ததில்லை’ என்று கூறினார்.
அத்துடன் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கி தடைக்கு பிறகு திரும்பிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித்தை, இந்திய ரசிகர்கள் கேலி செய்ததை விராட்கோலி கண்டித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இந்திய ரசிகர்கள் நடந்து கொண்ட விதத்திற்காக ஸ்டீவன் சுமித்திடம் நான் மன்னிப்பு கேட்டேன். ரசிகர்கள் அவரை கேலி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது எனது கருத்தாகும். அவரை சகஜமாக கிரிக்கெட் ஆட அனுமதியுங்கள்’ என்றார்.