இரவு 8:00 மணிக்கு ‘டாஸ்மாக்’ மூட உத்தரவு
வழிப்பறி அச்சுறுத்தல் உள்ள இடங்களில், ‘டாஸ்மாக்’ மதுக் கடைகளை இரவு, 8:00 மணிக்குள் மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
‘டாஸ்மாக்’ கடைகள், பகல், 12:00 முதல், இரவு, 10:00 மணி வரை, செயல்படுகின்றன. ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், இரவு, 10:00 மணிக்கு கடையை மூடி, பணத்துடன், விற்பனையாளர்கள் செல்கின்றனர்.சில இடங்களில், இவர்களை தாக்கி, மர்ம நபர்கள், பணத்தை வழிப்பறி செய்து விடுகின்றனர். இதை தடுக்க, இதுபோன்ற பகுதிகளில், இரவு, 8:00 மணிக்குள் கடைகளை மூட, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வேலுார் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:வேலுார் மாவட்டத்தில், 150 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், ஆள் நடமாட்டமின்றி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக, வழிப்பறி அச்சுறுத்தல் உள்ள இடத்தில், 40 கடைகள் உள்ளன. இங்கு இரவு, 8:00 மணிக்கு மேல், விற்பனை நடப்பதில்லை. இதில், 50 ஆயிரம் ரூபாய் மட்டும் விற்பனையாகும் கடைகள், 10 உள்ளன.இவற்றை இரவு, 8:00 மணிக்கே மூட, உத்தரவிடப்பட்டுள்ளன. இவை மூடப்படுவதால், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நஷ்டம் ஏற்படாது. இந்த கடைகளில், குறைந்த அளவு மதுபானங்கள் இருப்பு வைக்கவும், உத்தரவிடப்பட்டுள்ளன.
இதனால், கடை விற்பனையாளர்கள், குறித்த நேரத்தில், பாதுகாப்பாக, பணத்துடன் வந்து விடுவர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.