முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வு பணியை தொடங்கிய கேரளா
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு எதிராகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராகவும் தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த பிப்ரவரியில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அப்துல் நசீர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதில், முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கடந்த 2014ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கேரள அரசு மதிக்காமல் புதிய அணையை கட்டும் திட்டத்தை மத்திய அரசின் ஒப்புதலுக்கு முன்வைத்துள்ளது. இதுதவிர முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பையும் கேரள அரசு கருத்தில் கொள்ளவில்லை.
மேலும் 2015ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிபுணர்கள் மதிப்பீட்டு குழுவின் 84வது கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பான எந்த திட்டமாக இருந்தாலும், அது இரு மாநிலங்களின் ஒப்புதலுக்கு பிறகே பரிசீலிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் கேரள அரசு இந்த நிபந்தனையையும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் மதிக்காமல் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கோரி உள்ளது. மத்திய அரசும் இந்த ஆய்வு தொடர்பாக அனுமதி வழங்கி உள்ளது. இது முற்றிலும் கோர்ட்டு அவமதிப்பு ஆகும் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதற்கு கேரள அரசு தரப்பில், முல்லைப்பெரியாறு பகுதியில் ஆய்வு மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக இறுதி கட்டத்தை நாங்கள் நெருங்கவில்லை. தமிழக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. பரஸ்பர ஒப்புதலுடன்தான் அணை கட்ட முடியும் என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு இந்த ஆய்வுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த சூழ்நிலையில் நாங்கள் புதிய அணை எதையும் கட்ட முடியாது. புதிய அணைக்கான ஆய்வு மட்டுமே செய்யப்படுகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்பு மற்றும் அனுமதியுடன் மட்டுமே அங்கு புதிய அணை கட்டப்படும் என கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் ஒப்புதல் இன்றியோ, சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி இன்றியோ புதிய அணையை கேரளா கட்டக்கூடாது என்று கூறி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு பணியை கேரளா தொடங்கியுள்ளது. தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, முல்லை பெரியாறு அணையில் கேரள அரசு ஆய்வு செய்து வருகிறது.