Breaking News
பந்து தாக்கியதும் பிலிப் ஹியூஸ் மரணம் தான் நினைவுக்கு வந்தது – ஆஸ்திரேலிய வீரர் சுமித் பேட்டி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித், லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் பந்து தாக்கி காயமடைந்தார். வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அதிவேகமாக வீசிய ‘பவுன்சர்’ பந்து அவரது கழுத்தை பலமாக பதம் பார்த்தது. நிலைகுலைந்து கீழே சரிந்த சுமித் மைதானத்தை விட்டு வெளியேறி சிகிச்சை பெற்றார்.

ஆனால் தைரியமாக சிறிது நேரத்தில் களம் இறங்கிய அவர் 92 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனால் மறுநாள் அவருக்கு தலைவலி அதிகமாக இருப்பதாக உணர்ந்ததால் மறுபடியும் பரிசோதனை செய்யப்பட்டதோடு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் அந்த டெஸ்டின் 2-வது இன்னிங்சில் அவர் ஆடவில்லை. 3-வது டெஸ்டில் இருந்தும் விலகினார்.

இந்த நிலையில் பந்து தாக்கிய சம்பவம் குறித்து ஸ்டீவன் சுமித் நேற்று நினைவு கூர்ந்தார். சுமித் கூறியதாவது:-

பந்து தாக்கியதும் எனது மனதில் சில விஷயங்கள் ஓடின. குறிப்பாக பந்து கழுத்து பகுதியில் தாக்கியதும் சில வருடங்களுக்கு முன்பு இதே போன்று பந்து தாக்கி மரணம் அடைந்த சக வீரர் பிலிப் ஹியூசின் சம்பவம் தான் நினைவுக்கு வந்தது. பிறகு சுதாரித்துக் கொண்டு, ‘நான் இங்கு நன்றாகத்தான் இருக்கிறேன். எல்லாம் சரியாகி விட்டது’ என்று என்னை தேற்றிக் கொண்டேன். முதலில் கொஞ்சம் கவலைப்பட்டாலும், மனதளவில் வலிமையாக இருந்தேன். முதற்கட்ட சோதனையில், உடல் அளவில் எந்த சிக்கலும் இல்லை என்று உறுதியான பிறகே மறுபடியும் களம் கண்டு விளையாடினேன்.

ஆனால் மறுநாள் காலை டாக்டர் என்னை மறுபடியும் பரிசோதித்து உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்ட போது ‘இரவில் அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்தால் எந்த மாதிரி தலைவலி, தலைசுற்றல் இருக்குமோ? அதை போன்று உணர்வதாக சொன்னேன். உடலில் கொஞ்சம் தடுமாற்றமும் தெரிந்தது. இதனால் சில நாட்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர். துரதிர்ஷ்டவசமாக அற்புதமான டெஸ்ட் போட்டியை தவற விட்டு விட்டேன்.

இனி வரும் டெஸ்ட் போட்டியிலும் ஜோப்ரா ஆர்ச்சர் பவுன்சர் தாக்குதலை தொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன். அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராகவே உள்ளேன். எனது அணுகுமுறையில் எந்த மாற்றமும் செய்யமாட்டேன். ஆர்ச்சரின் பந்து எனது உடலை தாக்கினாலும், அவரது பந்து வீச்சில் நான் அவுட் ஆகவில்லை.

கழுத்து பகுதிக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையிலான கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஹெல்மெட்டை அணிந்திருந்தால் அன்று இந்த சம்பவம் தடுக்கப்பட்டு இருக்குமா? என்பது குறித்து உறுதியாக சொல்லமுடியாது. ஆனால் இத்தகைய ஹெல்மெட்டை அணியும் போது எனக்கு இதய துடிப்பு அதிகரிப்பதாக உணர்கிறேன். அசவுகரியமாக இருந்தாலும் அதை அணிந்து கொண்டு விளையாட முயற்சித்து வருகிறேன். இவ்வாறு சுமித் கூறினார்.

மான்செஸ்டரில் 4-ந்தேதி தொடங்க உள்ள 4-வது டெஸ்ட் போட்டிக்கு விளையாட தயாராகி வரும் ஸ்டீவன் சுமித், அதற்கு முன்னோட்டமாக டெர்பியில் இன்று தொடங்கும் டெர்பிஷைர் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் களம் இறங்க உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.