Breaking News
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் லபுஸ்சேனின் இரட்டை சதத்தால் (215 ரன்கள்) 454 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 251 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது.

இதனை அடுத்து நியூசிலாந்துக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காமல் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்து இருந்தது. டேவிட் வார்னர் 23 ரன்னுடனும், ஜோ பர்ன்ஸ் 16 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ் ஆகியோர் தொடர்ந்து விளையாடினார்கள். ஜோ பர்ன்ஸ் 40 ரன்னில் டாட் ஆஸ்டில் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். அடுத்து லபுஸ்சேன், டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். நிலைத்து நின்று ஆடிய டேவிட் வார்னர் 147 பந்துகளில் சதத்தை எட்டினார். அவர் அடித்த 24-வது சதம் இதுவாகும்.

முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்து அசத்திய லபுஸ்சேன் 74 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 59 ரன்கள் எடுத்த நிலையில் மேட் ஹென்றி பந்து வீச்சில் டாம் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 52 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. டேவிட் வார்னர் 159 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 111 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

2-வது இன்னிங்சில் நடுவரின் எச்சரிக்கையையும் மீறி டேவிட் வார்னர், லபுஸ்சேன் ஆகியோர் பிட்ச்சை சேதப்படுத்தும் வகையில் ஓடியதற்காக ஆஸ்திரேலிய அணிக்கு 5 ரன்களை அபராதமாக நடுவர் அலீம் தார் விதித்தார். அந்த அபராத ரன் நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரில் சேர்க்கப்பட்டது. இதனால் நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 256 ரன்னாக அதிகரித்தது. அத்துடன் நியூசிலாந்து அணியின் வெற்றி இலக்கில் 5 ரன்கள் குறைந்தது.

பின்னர் 416 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்து வீச்சில் நியூசிலாந்து விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 38 ரன்னுக்குள் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டாம் பிளன்டெல் 2 ரன்னிலும், பொறுப்பு கேப்டன் டாம் லாதம் 1 ரன்னிலும், ஜீத் ராவல் 12 ரன்னிலும், கிளென் பிலிப்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், ராஸ் டெய்லர் 22 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள்.

கிரான்ட்ஹோம் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அவர் 68 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்து வீச்சில் ஜோ பர்ன்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கைவிரவில் ஏற்பட்ட காயம் காரணமாக மேட் ஹென்றி பேட்டிங் செய்யவில்லை. நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 47.5 ஓவர்களில் 136 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 279 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நீல் வாக்னெர் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் நின்றார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். நாதன் லயன் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 18-வது முறையாகும். முதல் இன்னிங்சிலும் அவர் 5 விக்கெட்டுகள் சாய்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி 5 டெஸ்டுகளில் 896 ரன்கள் குவித்து சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங் கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் 296 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் 247 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்தி ரேலியா வென்று இருந்தது.

இந்த போட்டி தொடர் முடிவில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி புள்ளி பட்டியலில் இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய அணி 296 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.