மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா வெற்றி ஸ்ரீகாந்த், பிரனீத் வெளியேற்றம்
மொத்தம் ரூ.2 கோடியே 86 லட்சம் பாிசுத்தொகைக்கான மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையா் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் எவ்ஜெனியா கோசெட்ஸ்கயாவை பந்தாடி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறார். இந்த ஆட்டம் 35 நிமிடம் மட்டுமே நடந்தது. சிந்து 2-வது சுற்றில் ஜப்பானின் அயா ஒஹோரியை சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் 21-15, 21-17 என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் லியான் டானை வெறும் 36 நிமிடங்களில் விரட்டியடித்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய முன்னணி வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உலக பேட்மிண்டனில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் சாய் பிரனீத் 11-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவிடம் வீழ்ந்தார்.
மற்றொரு இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 17-21, 5-21 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீரர் சோவ் டைன் சென்னுடன் (சீனதைபே) வெறும் 30 நிமிடங்களில் பணிந்தார்.
முன்னாள் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனும், சாய்னா நேவாலின் கணவருமான் காஷ்யப், நம்பர் ஒன் வீரரும், உலக சாம்பியனுமான ஜப்பானின் கென்டோ மோமோட்டாவிடம் மோதினார். எதிர்பார்த்தது போலவே மோமோட்டா 21-17, 21-16 என்ற நேர் செட்டில் சுலபமாக வெற்றி பெற்றார்.
அதே சமயம் இந்தியாவின் சமீர் வர்மா 21-16, 21-15 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் வாங்சாரோயனையும், இந்தியாவின் பிரனாய் 21-9, 21-17 என்ற நேர் செட்டில் ஜப்பானின் சுனியாமாவையும் வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினர்.