Breaking News
தென்ஆப்பிரிக்க பவுலர் ரபடாவுக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை

போர்ட்எலிசபெத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட்டை (27 ரன்) கிளன் போல்டு செய்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா, விக்கெட் சாய்த்த உற்சாகத்தில் அவர் அருகில் சென்று ஆக்ரோஷமாக கத்தினார். எதிரணி வீரரை கோபமூட்டும் மற்றும் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ரபடாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதித்தது. மேலும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது தகுதி இழப்பு புள்ளி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இரண்டு ஆண்டுகளில் 4 தகுதி இழப்பு புள்ளியை எட்டும் போது ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். இதன்படி 24 வயதான ரபடா இங்கிலாந்துக்கு எதிராக வருகிற 24-ந்தேதி ஜோகனஸ்பர்க்கில் தொடங்கும் 4-வது டெஸ்டில் விளையாட முடியாது.

ரபடா மீதான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உலகின் சிறந்த வீரரின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடியதற்காக ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது முட்டாள்தனமானது. பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்கு நடவடிக்கை இல்லை. ஆனால் விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடியதற்கு கடினமான தண்டனையா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.