Breaking News
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வழக்கு: கேரள கவர்னர், முதல்-மந்திரி மோதல் முற்றுகிறது

குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. ஜனாதிபதியின் ஒப்புதலும் கிடைத்து சட்டவடிவம் பெற்றுள்ளது.

ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என்று பினராயி விஜயன் ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி, கடந்த மாதம் கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதே சமயத்தில், கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலை பெற்ற ஒரு சட்டத்தை பாதுகாக்க வேண்டியது தனது கடமை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

ஆகவே, சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வழக்கு தொடர்ந்ததை அவர் விரும்பவில்லை. தன்னிடம் தகவல் தெரிவிக்காமல், சுப்ரீம் கோர்ட்டை அணுகியது முறையற்ற செயல் என்று கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார். தான் ஒன்றும் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ அல்ல என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.

இதையடுத்து, பினராயி விஜயன் மற்றும் மந்திரிகளுக்கும், கவர்னருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அந்த கட்சியும் கவர்னருக்கு எதிராக பேசி வருகிறது.

இந்நிலையில், தன்னிடம் தகவல் தெரிவிக்காமல், சுப்ரீம் கோர்ட்டில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசு வழக்கு தொடர்ந்தது தொடர்பாக கேரள அரசிடம் கவர்னர் ஆரிப் முகமது கான் அறிக்கை கேட்டுள்ளார்.

தலைமைச் செயலாளரிடம் அவர் அறிக்கை கேட்டிருப்பதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், ஆளும் தரப்புக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.

இதற்கிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காக கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று ஒரு நிகழ்ச்சியை புறக்கணித்தார். கோழிக்கோட்டில், கேரள இலக்கிய திருவிழாவின் நிறைவு விழாவில் அவர் பங்கேற்பதாக இருந்தது.

ஆனால், தனது பாதுகாப்பு குறித்த கவலையால், நிகழ்ச்சிக்கு கவர்னர் செல்லவில்லை.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.