Breaking News
உள்ளாட்சி தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் பாதுகாப்பாக உள்ளதா? ஐகோர்ட்டு கேள்வி

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்ற பகுதிகளில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரியும், தள்ளி வைக்கப்பட்டுள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் 10 ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தலை நடத்தக்கோரியும் தி.மு.க., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அதில், ‘சேலம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களின் தேர்தல் முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, தி.மு.க. தொடர்ந்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று கூறப்பட்டு இருந்தது.

அதிகாரிக்கு அரிவாள் வெட்டு

மேலும் அந்த பதில் மனுவில், ‘போதிய கவுன்சிலர்கள் மறைமுகத்தேர்தலுக்கு வராததால் சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சில தேர்தல் அதிகாரிகளுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக 10 ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான கோரிக்கைகளை தேர்தல் அலுவலர்கள் தான் பரிசீலிப்பார்கள்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட தி.மு.க., தரப்பு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ‘மறைமுகத்தேர்தலில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நடந்த தேர்தலின் போது போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் என்பவரை அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் அரிவாளால் வெட்டியுள்ளார்’ என்று வாதிட்டார்.

நீதிபதி கேள்வி

இதையடுத்து நீதிபதி, தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் பாதுகாப்பாக உள்ளதா? அவை தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? கண்காணிப்பு கேமரா பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என்பதற்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளிக்க முடியுமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் மூத்த வக்கீல், ‘கண்காணிப்பு கேமரா பதிவுகள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது வரை அந்த பதிவுகளை ஆய்வு செய்யவில்லை’ என்று பதில் அளித்தார். இதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.