குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம்: புதிய தரவரிசை பட்டியல் வெளியாக வாய்ப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் 16 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த குரூப்-4 பணிக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி நடந்தது. இதில் தேர்வு எழுதியவர்களில் தேர்ச்சி பெற்ற 12 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் தரவரிசை பட்டியலை கடந்த நவம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
அதில் முதல் 100 இடங்களுக்குள் 35 இடங்களை ராமநாதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் எழுதியவர்கள் பிடித்து இருந்தனர். மேலும், அந்த 35 பேரும், தரவரிசை பட்டியலில் இடம்பெற்றிருந்த சிலரும் வேறு மாவட்டத்தில் இருந்து அங்கு தேர்வு எழுதியது தெரியவந்தது. இதையடுத்து மற்ற தேர்வர்கள் இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் தெரிவித்தனர்.
விசாரணை
அந்த புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களிடம் டி.என்.பி.எஸ்.சி. விசாரணை நடத்தியது. கடந்த 13-ந் தேதி ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதிய வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நேரில் ஆஜராகி தங்களுடைய விளக்கத்தை அளித்தனர். மேலும் அவர்களிடம் முறைகேடு புகார் தொடர்பான சில கேள்விகளையும் சம்பந்தப்பட்டவர்களிடம் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் முன்வைத்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு சில முடிவுகளை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய தரவரிசை பட்டியல்?
அதன் அடிப்படையில், கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலுக்கு பதிலாக, அதில் முறைகேட்டில் ஈடுபட்ட சிலரின் பெயர்களை நீக்கிவிட்டு, புதிய தரவரிசை பட்டியல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் இருந்து முழுமையான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த முறைகேடு தொடர்பான நடவடிக்கையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.