‘தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்’ – மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
நாடு முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு முதல் அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். ‘தேர்வு கலந்துரையாடல்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி 3-வது ஆண்டாக நேற்று நடத்தப்பட்டது.
டெல்லி தல்கத்தோரா உள் விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் என 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் மட்டுமே 1050 பேர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் கட்டுரைப்போட்டி மூலம் நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் பிரதமர் மோடியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும் தேர்வு தொடர்பான சந்தேகங்களையும் கேட்டு தெளிவுபெற்றனர். அவர்களுக்கு பல்வேறு பயனுள்ள குறிப்புகளை பிரதமர் வழங்கினார். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாடு முழுவதிலும் பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
நாடு விடுதலை அடைந்த நூற்றாண்டான 2047-ல் தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றப்போகும் மாணவர்களுடன் இன்று (நேற்று) நான் பேசுகிறேன். நாட்டின் அரசியலமைப்பு பேணும் அடிப்படை கடமைகளை இந்த தலைமுறை தாங்களாவே எடுத்து செயல்படும் என நம்புகிறேன். அடிப்படை கடமைகளின் முக்கியத்துவத்தை மகாத்மா காந்தி குறிப்பிட்டு உள்ளார்.
மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலேயே மாணவர்களுடனான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதுதான் அதிக மகிழ்ச்சி தருகிறது.
மாணவர்கள் தேர்வு அறையில் எத்தகைய அழுத்தத்துடனும் நுழையக்கூடாது. அங்கு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது குறித்து கவலைப்பட வேண்டாம். உங்கள் மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் என்ன தயாரித்திருக்கிறீர்களோ அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
தேர்வுகளும், நல்ல மதிப்பெண்ணும்தான் அனைத்தும் என்ற எண்ணத்தில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். பொதுத்தேர்வு என்பது கல்விப்பயணத்தின் ஒரு பகுதி தான். தோல்வியை கண்டு அஞ்சக்கூடாது. அதை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கும் நிகழ்வில் வெற்றி உறுதியில்லை என்பதால், அந்த நிகழ்ச்சியை பார்க்க செல்ல வேண்டாம் என எனக்கு சொல்லப்பட்டது. ஆனால் நான் அங்கு இருக்க வேண்டிய தேவை இருந்தது. தோல்வியில் இருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் வேகமாக மாறி வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்து அஞ்சுவது நல்லதல்ல. தொழில்நுட்பம் ஒரு நண்பன்தான். அதைப்பற்றிய வெறும் அறிவு மட்டும் இருந்தால் போதாது. அதற்கேற்ப உங்களை நீங்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அதேநேரம் தொழில்நுட்பம் நம்மை ஆளுகை செய்ய விடக்கூடாது. நமது கட்டுப்பாட்டுக்குள் அதை வைத்திருக்க வேண்டும்.
தற்போதெல்லாம் வீடுகளில் ஒரு காட்சியை பார்க்க முடியும். அதாவது ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேரும் ஒன்றாக அமர்ந்திருப்பர். ஆனால் ஒவ்வொருவரும் தனித்தனியாக செல்போனில் எதையாவது தேடிக்கொண்டு இருப்பர்.
இப்படிப்பட்ட சூழலில் தொழில்நுட்பம் இல்லாத ஒரு மணி நேரத்தை பற்றி நாம் எண்ணிப்பார்க்க முடியுமா? அல்லது தொழில்நுட்பம் இல்லாத இடத்தைத்தான் கண்டுபிடிக்க முடியுமா? இப்படித்தான் தொழில்நுட்பம் நம்மை திசை திருப்பி விடுகிறது.
எனவே தொழில்நுட்பம் நமது நேரத்தை வீணடிக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். நமது வீடுகளில் தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தாத ஒரு அறை வேண்டும். அதில் நுழைபவர்கள் கருவிகள் எதையும் கொண்டு செல்லக்கூடாது.
மாணவர்கள் கல்வியுடன் கூடுதல் கல்விசார் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தங்கள் நண்பர்களுடன் விவாதிக்கும் ஆர்வமான நல்ல அம்சங்கள் எவை என்பதை பெற்றோர் கண்டுபிடித்து அதில் அவர்களது கவனத்தை செலுத்த ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
தமிழக மாணவர்கள் 66 பேர் பங்கேற்பு
பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 66 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அந்த வகையில் சென்னையில் பல பள்ளிகளில் பிரதமர் மோடியின் உரையை நேரடியாக மாணவர்கள் பார்த்து பயன்பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றினார். அவருடைய பேச்சை தமிழில் மொழிமாற்றம் செய்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்து சொல்ல பல பள்ளிகளில் மொழி பெயர்ப்பாளர்கள் வைக்கப்பட்டனர்.
சென்னை எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுபலட்சுமி, காவியா ஆகிய மாணவிகள் பிரதமர் மோடியின் உரையை மொழி பெயர்த்தனர். இதை பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கேட்டு பயன்பெற்றனர்.
பிரதமர் மோடியின் பேச்சு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.