ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 100-வது வெற்றியை பெற்றார், பெடரர்
கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 6 முறை சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரர், தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மனை சந்தித்தார். மில்மன், பெடரருக்கு கடும் குடைச்சல் கொடுத்ததால் களத்தில் அனல் பறந்தது. தலா 2 செட் வீதம் இருவரும் கைப்பற்றிய நிலையில், கடைசி செட் மேலும் விறுவிறுப்பானது. இதில் அவர்கள் தங்களது சர்வீஸ்களை மட்டும் புள்ளிகளாக மாற்றுவதில் கவனம் செலுத்தியதால் 6-6 என்று சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து சூப்பர் டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. டைபிரேக்கரில் தொடக்கத்தில் பெடரர் பந்தை வலையிலும், வெளியிலும் அடித்து தவறிழைக்க 4-8 என்ற கணக்கில் பின்தங்கி தோல்வியின் விளிம்புக்கு சென்றார். ஆனாலும் மனம் தளராமல் சுதாரித்து கொண்டு சரிவில் இருந்து மீண்ட பெடரர் தொடர்ச்சியாக 6 புள்ளிகளை வசப்படுத்தி ஒரு வழியாக வெற்றிக்கனியை பறித்தார். ஆஸ்திரேலிய நேரப்படி நள்ளிரவு 12 மணியை தாண்டியும் நீடித்த இந்த ஆட்டத்தில் பெடரர் 4-6, 7-6 (7-2), 6-4, 4-6, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் மில்மனை சாய்த்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றிக்காக பெடரர் 4 மணி 3 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. 38 வயதான பெடரர் ஆஸ்திரேலிய ஓபனில் ருசித்த 100-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் இங்கு ‘வெற்றியில் செஞ்சுரி’ போட்ட முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். பெடரர் ஆஸ்திரேலிய ஓபனில் 100 வெற்றிகளுடன் 14 ஆட்டங்களில் தோல்வியும் சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.